வளரும் தமிழ்
153
முதனூல், வழிநூல் இயல்புகளை உன்னிக் கவனிப்பவர்க்கு முதனூலே உறுதிபயப்பதும், பொது நூலுமாம் என்பதும், உணர்வு மிகுதியானும், தேயவியற்கையானும் அறியப்படத்தக்க செய்திகளை ஒட்டிக் கூறுபவையே வழி நூல், சார்பு நூல்களாம் என்பதும் விளங்கும். ஆகவே, காலவரையறையை நீக்கிப் பார்த்தால் பரிமேலழகர் கூறும் இயல்புகளின்படியும், திருவள்ளுவர் நூலே முதனூல் என்பதற்கு அட்டியில்லை. திருவள்ளுவர் நூலைக் கால இயற்கைக்கும், தேயவியற்கைக்கும் தக்கபடி விரித்த சோமேசர் முதுமொழி வெண்பாப் போன்ற நூல்கள் திருவள்ளுவர் நூலுடன் எத்தகைய உறவுடையவையோ அத்தகைய உறவுதான் இவ் வடமொழி நூல்களுக்கும். அவை காலத்தால் திருக்குறளுக்கு முந்தியவையாமே என்னின் அதனைக் கீழே ஆராய்வோம்.
இதற்கிடையில் தமிழர்களிடையே இன்னொரு வினா எழலாம்: 'பரிமேலழகர் திருக்குறளையே முதனூலாகக் கொண்டாராயின் வடமொழிக் கருத்து மூலங்களை இத்தனை அரும்பாடுபட்டுத் தேடுவானேன்-?' என்பதே அக்கேள்வி.
பரிமேலழகர் வடமொழியிற் சிறந்த புலவர். இவ்வொப்புமைகள் தரப்பட்டதே அதனைக் காட்டும்.புலவர்கள் தம் புலமை விரிவைப் பயன்படுத்தி ஒப்புமை காட்டல் இன்றும் புதிதல்ல. சங்க நூல்களிற் பலவற்றை உரையுடனும், உரையின்றியும் பதிப்பித்த அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பிற சங்க நூல்கள்,சிந்தாமணி, கம்பராமாயணம், பாரதம் ஆகியவற்றிலிருந்து ஒப்புமைக் குறிப்புகள் தந்திருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால், அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் போல ஒப்புமை தந்த துடன் பரிமேலழகர் நிறுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மையே. வடமொழிக் கருத்துகள் திருக்குறளுக்கு முந்தியவை என்ற தம் இயற்கை எண்ணத்தையும் தெரிவித்திருக்கிறார்.
'இயற்கை எண்ணம்' என்று குறித்ததன் காரணம் இக்கால ஆராய்ச்சியாளர்போல், அவ்வெண்ணத்தைப் புதிதாக நிலைநாட்ட அவர் முயன்றவரல்லர் என்பதற்கே.