பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________


இவ்வியற்கை எண்ணம்-அல்லது-நம்பிக்கையால் தூண்டப்பட்ட அவர், ஒப்புமை காட்டியது அவர் புலமையின் காரணமாக மட்டுமன்று என்பது அவர் கால நிலைமைகளை அறிபவர்க்கு மட்டுந்தான் விளங்கும். பரிமேலழகர் காலம் சைவ, வைணவ சமய மறுமலர்ச்சியும், வடமொழி மேலாண்மையும் ஒருங்கே மேலோங்கிய காலம். சைவ, வைணவ சமயங்களின் பழைய வரலாற்றைக் கவனித்தால் அவை வேதநெறிக்குப் புறம்பாக, பல இடங்களில் எதிராகக்கூட வளர்ந்தவை என்று காணலாம். ஆனால், புத்த, சமண சமயங்கள் அவற்றையும் தாண்டி வேதநெறியை எதிர்த்தபோது, வேத நெறியாளர் சைவ, வைணவரை அணைத்துக் கொண்டு புத்த, சமண சமயத்தை அழிப்பதில் அவர்கள் ஒத்துழைப்பைப் பெற்றனர்.பெற்றாலும், வேத நெறிக்கு முதலிடம் பெற்றுவிடுதல் வேண்டும் என்ற காரியத்திலும் கண்ணாயிருந்து அதற்கு அவ்வப்போது சைவ, வைணவப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழரிடையே புத்தம், சமணம் மேலோங்கியபோது வேத நெறிக்குத்தான் இழுக்கு நேர்ந்ததேயன்றித் திருக்குறளுக்கு இழுக்கு நேரவில்லை. புத்த நூலாகிய மணிமேகலையின் ஆசிரியர் அவர் குறளொன்றை மேற்கோளாகக் காட்டி, அவரைப் 'பொய்யில் புலவன்' என்று குறித்திருக்கிறார். புத்தரையே குறிக்கும்போதுகூட ஆசிரியர் இதற்கு மேற்பட்ட புகழுரை தரமுடியாது. சமண நூல்கள் இன்னும் ஒருபடி போய் அவரைத் தங்கள் ஆசிரியருள் ஒருவராகக் கொள்கின்றன.

சைவ,வைணவ மறுமலர்ச்சியிலும் திருவள்ளுவர் புகழுக்குக் குறைவில்லை. சைவர் அவரைப் பொய்யடிமையில்லாத புலவர்களுள் இடந்தந்ததுடன் நில்லாது 64 நாயன்மாருள்ளும் அவரை ஒருவராக்கினர். வைணவ ஆழ்வார்களும் அவரைப் பாராட்டப் பின்வாங்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழரிடையே எழுந்த எந்தக் கலையிலும் முழுப் பொலிவுடன் ஓங்கியுயர்ந்து மிதந்த புகழ் திருக்குறளினுடையது. திருவள்ளுவரின் இப்புகழை வேதநெறியாளர் கொள்ளவும் முடியவில்லை. தள்ளவும் முடியவில்லை. அவர்கள் அதனை ஏற்றிருந்தால் திருவிளையாடலையும், பெரிய புராணத்தையும்