அது உகந்ததல்ல. ஒப்புமையும் திருக்குறளைப் பற்றியமட்டில் தற்செயலான பொதுக் கருத்துகளன்றி வேறில்லை.
எனவே ஒப்புமை வகையால் ஏதேனும் நாட்ட வேண்டுபவர் நாட்டஞ் செலுத்தத் தக்க நூல்கள் மற்ற மூன்றுமே.
காமாந்தக நீதிநூல் காலமறியப் படாதது. மேலும் அது சாணக்கியர் பொருள் நூலின் மறுபதிப்பேயாகும். அதன் பொருள் ஒழுங்கு, குறளை ஒட்டியதானால், அது குறளைப் பின்பற்றி ஏற்பட்டதாகக்கூட இருக்கக்கூடும். பிறமொழியாளர் வடமொழியைப் பின்பற்றியிருந்தால் அதைப் பெருமையுடன் கூறுவதே மரபு. ஆனால், வடமொழி வடவர்க்குப் பொதுமொழியாதலால் எம் மொழியினரும் தம் கருத்தை-தாம் அறிந்த கருத்தை வடமொழி உலகுக்குப் புதியதாக அதனைத் தரலாம். அங்ஙனம் தரும்போது பெயர் குறிக்கும் மரபு கிடையாது.மேலும் வடமொழியிலிருந்து புதுக்கருத்துப் பெறுங் காலம் வள்ளுவர்க்கு நெடுநாள் பிந்திய காலம். வடமொழியில் அக்காலத்தில் இலக்கிய வளம் ஏற்படாத காலம் என்று மேலே கூறினோம்.
மனுநீதி என்று இப்போது வழங்கும் நூல் ஆதி மனுநூல் அன்று என்று அந்நூலே குறிப்பிடுகின்றது. ஆதி மனுநூலின் கருத்துகளைத் தொகுத்துப் பிற்காலத்தார் எழுதிய நூல்வரிசையில் அது ஒன்றேயாகும். அதன் இறுதிப் படிவம் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குச் சற்றுமுன் ஏற்பட்டதென வின்ஸன்ட் ஸ்மித் கூறுகிறார். இதன் பகுதிகள் சில பழைமையாயிருக்கக் கூடுமாயினும் இன்றைய வடிவிலிருந்து நூலாராய்ச்சி- வரலாற்றாராய்ச்சி பயன்படாதது.
கடைசியாகச் சாணக்கியர் செய்தியை எடுத்துக் கொள்வோம். இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டினிறுதியில் வட இந்தியா முழுவதையும் வென்றாண்ட பேரரசன் சந்திரகுப்தனின் அமைச்சன் என்று கூறப்படுகிறது. இது உண்மை யானால், அவர் காலம் திருக்குறளின் காலமாக ஒப்புக்கொள்ளப்பட்டகி.பி.முதல் நூற்றாண்டுக்கு 500 ஆண்டுகள் முந்தியதாயிருத்தல் வேண்டும்.