12. நாடகத் தமிழ்
கொற்கை நண்பன் ஒருவன் என்னுடன் உயர்தரப் பள்ளியில் பயின்று வந்தான். அவன் கிழிந்த ஆடைகளையே உடுப்பான்.ஆனால், அவன் ஆடைகள் ஒன்றும் அழுக்காயிருந்த தில்லை. அவனுக்கு வருவாய் மிகக் குறைவு. ஆனால், அவன் பிறர்க்கு உழைப்பதிலும் கையிலுள்ளவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதிலும் குறைபாடற்றவன். பெருந்தன்மையும் அன்பும் அவனிடம் இயல்பாகவே குடி கொண்டிருந்தன. பரம்பரைச் செல்வரும் அவன் செல்வப் பண்புகளுக்கு முன் நாணமுற்றனர்.
கொற்கை நண்பன் பிறப்பிடத்துக்கும் ஒரு நாள் சென்றிருந்தேன். அது ஊர் என்று சொல்வதற்குகூடப் பொருந்தாத நிலையிலிருந்தது. ஆனால், அங்கங்கே சில தெருக்கள் தேரோடும் வீதிகளை நினைவூட்டின. சில வீடுகளில் சிதைந்த சுவர்கள் கோட்டைச் சுவர்கள் போன்றிருந்தன. குப்பைக் கூளங்களிடையே அழகிய சிலைகளின் பகுதிகள், அரும்பொருள்கள் காணப்பட்டன. நண்பன் வீட்டுப் பழம் பொருள்களில் ஒன்று எல்லாரையும் பல நாள் மலைக்கச்செய்தது. அது ஒரு கடிகாரம் போன்றிருந்தது. அது அக்காலக் கடிகாரமோ என்று எண்ணினோம். ஆனால், அதில் கடிகாரத்தின் தெளிவான குறிகள் எதுவுமில்லை. நெடுநாள் கழித்துப் படைவீர நண்பன் ஒருவன் அதைக் கண்டு, “இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது. இது வடக்கு நோக்கிக் கருவியாயிற்றே!” என்றான். ஆம். கொற்கை நகரத்தார் கப்பலோட்டிய காலத்தின் ஒரு நினைவூட்டு அது என்று அறிந்தோம்.
கொற்கை நண்பன் செல்வப்பண்பு, அவன் குடியின் பழஞ்செல்வம் நினைவூட்டுகிறது. கொற்கையின் அரும் பொருட்குவைகள் அதன் பழம் பெருமையைக் காட்டுகின்றன. இவற்றைப் போன்றே தமிழர் புதையல் நீதியாகிய