(164)
அப்பாத்துரையம் 1
—
பேணப்பட்டு இன்றும் நாடக ஆசிரியராய் விளங்குகின்றனர். அவர்கள் நாடகம் இன்று மலைநாட்டுத் தமிழின் தோன்றலான மலையாளத்தில் 'சாக்கியார் கூத்து' என்றும், ஓட்டம் துள்ளல் என்றும் வழங்கப்படுகிறது. இதுவன்றி மலையாள நாட்டில் பழந்தமிழ் மரபின் ன்னொரு கலையாகிய பாவைக்கூத்து (பொம்ம லாட்டம்) தெலுங்கு நாட்டிலும் கதைகளி, ஊமைக்கூத்து முதலிய பல தமிழ்நாடக வகைகள் சிதைந்தும் உருத்திரிந்தும் மலையாள நாட்டிலும் நடமாடுகின்றன.
பழந்தமிழ் நாடக இயல்பை அறியச் சிலப்பதிகார உரைக் குறிப்புகளுடன் இச்சிதைந்த தமிழ் நாடக முறைகளையும் வைத்து ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். தமிழரின் பழஞ்சொத்தாகிய நாடகத்தமிழில் நாடக உருவம் இங்ஙனம் கொடுந்தமிழ் நாடுகளிலும், அதன் இலக்கிய வடிவம் ஓரளவு தமிழிலும் மீந்துள்ளது. அதாவது அச்செல்வத்தின் உடல் தமிழகத்திலும், உயிர் மலையாள முதலிய நாடுகளிலும் உள்ளது. எதெதற் கெல்லாமோ பணத்தை வாரியிறைக்கத் தயங்காத தமிழ்ச் செல்வர், இவ்வுடலையும் உயிரையும் இணைப்பின் தமிழ் நாடகம் இந்நாளைய உயிரற்ற இரவல் நடிப்பாயிராமல் உயிருள்ள, வளரும் தமிழ்க் கலையாய்விடும் என்பதில் ஐயமில்லை.
தமிழிசை முற்றிலும் சிதையாமல் தேவாரத்தால் சிலகாலம் காக்கப்பட்டது போல், நாடகம் முற்றிலும் சிதையாமல் திருவாசகத்தில் காக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள திருப்பொன் னூசல், திருப்பொற்சுண்ணம், திருவெம்பாவை முதலியவையும், காப்பியங்களில் காணப்படும் கந்துகவரியும் உண்மையில் நாடக உறுப்புகளேயாகும்.
பழந்தமிழ் நாடக இயல்பை அறிய இன்னோர் உதவி, பிறநாட்டு நாடக வரலாறுகள் ஆகும். சிலப்பதிகாரத்தில் பொருளற்ற பல சிறு செய்திகள், அவற்றால் பொருளுடையவை யாகக் காணப்படும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையும் ‘என் அல்லது என' என்று முடிகின்றது. இது ஒரு 'குருட்டு விதி' என்று எண்ணப்படுகிறது. ஆனால், பழைய நாடக இயலில் இது ஓர் அரிய பொருளைக் குறித்தது. வட நாட்டிலும், இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் காலங்களிலும்கூட நாடக மேடைக்கு முன் திரைகள்