பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

||-

அப்பாத்துரையம் - 1

அவிநயம் இந்நாடகத்தில் முக்கியமானது. சிலப்பதிகாரத்தி லுள்ள உரையாடலும் சரி, வருணனையும் சரி, பாவங்களைவிட அவிநயங் களுக்கே ஏற்றமுறையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்று ஒவ்வொரு காதையும் ஒரு நீண்ட வாக்கியமாய் அமைந்திருப்பது ன்றைய மாணவர்க்கு மலைப்பைத் தரலாம். ஆனால், அவிநயத்தில் அது உண்மையில் தொடர்ந்து பொருளையும் நயத்தையும் கொண்டது என்பதைச் சிலப்பதிகாரத்தைச் சாக்கியர் கூத்தாக மலையாளச் சாக்கியர்களைக் கொண்டு நடிக்கவிட்டுப் பார்த்தால் அறியலாம்.

பழந்தமிழ் நாடகம், ஆதரவற்ற நிலையில் குறவஞ்சிப்

பாட்டாகவும், தெருக் கூத்தாகவும் அணிமைக் காலம் வரை ஓரளவு பயின்றே வந்திருக்கிறது. அயலார் ஆட்சியில் அயல்நாட்டுப் பண்பில் மயங்கிய செல்வரும், உயர் வகுப்பாரும், அவற்றைக் குறையுடையதாகக் கருதி, அவற்றைச் சிதைய வைத்தனரேயன்றி வேறன்று. புறக்கணிப்பு நஞ்சு ஏறி மலையாள நாடகத்தைக்கூட அழிக்க விருக்கிறது. தமிழன்பரும் மலையாள, தெலுங்கன்பரும் ஒத்துழைத்தால் அதனைச் சீரமைத்தல் ஒருவாறு கூடும். இவ்வகையில் வடமொழி நாடகமும் பெரிதும் பயன்படுவது என்றே எண்ணலாம். வடமொழி நாடகம் சமயச் சார்பற்ற தாக வளர்ந்ததையும், பண்டைய நாடகப் புலவர் பெரும்பாலும் புத்தராகவோ, சமணராகவோ, தாழ்ந்த வகுப்பினராகவோ இருந்து வந்திருப்பதும் நோக்க வடநாட்டில் பயின்ற அக்கலையும் உண்மையில் வடநாட்டுப் பழந் திராவிடக் கலையின் ஒரு தேய்ந்து திரிந்த வளர்ச்சியேதான் என்று எண்ண இடமுண்டு. தொலை நாடுகளான கிரீசு, இங்கிலாந்து நாடுகளின் நாடக வளர்ச்சிகூடத் தமிழ்நாடக வளர்ச்சி முறை காண உதவுமென்பது உறுதி.

திராவிடமொழி யன்பர்களும், திராவிடச் சார்பு மலிந்த வட இந்திய மொழி அறிஞர்களும், ஒன்றுபட்டு ஆராயின், இந்நாட்டின் பழங்கலைச் செல்வங்களில் பல புதையுண்ட பண்புகளை உயிர்பெறக் காணலாம். இவ்வகையில் வேறெந்நூலினும் பேருதவிபுரியும் பண்டைப் பெருநூல் சிலப்பதிகாரம் என்பது மிகையாகாது. அந்நூல் மூலம் வடமொழி நாடகக் கலையின் பிறப்பு வளர்ப்புப் பற்றிய பல செய்திகள் கூட விளக்கமடையக் கூடும்.