பேரறிஞர் அண்ணா
மணிவிழா வாழ்த்துரை
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித்திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து, பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித்திறமையை நாம் நன்கு அறிவோம்.