அறிவாலும் அனுபவத்தாலும் ஏற்படும் நாட்டுப் பொருள் துறை மேம்பாட்டையும் தனி மனிதர் வருவாய் மேம்பாட்டையும் விளக்கி, தொழிலாளர்களை யும், தொழில் முதலாளிகளையும் ஒருங்கே அத்துறையில் உழைக்க, அறிவு செலுத்த, முதலீடு செய்யத் தூண்டுதல். தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் பிள்ளைகளுக்கும் தொழிற் பள்ளிக்கூடங்களை இயக்கச் சார்பிலேயே தொடங்கி, அரசாங்க ஆதரவை எதிர்பார்த்தும் பாராமலும் தொழில்கள் நடத்தக்கூடிய வகையில் தொழிற்கல்வி ஏற்படுத்தல்,தொடக்கத்தில் தற்காலிகமாக ஆங்கில அறிவியல் துறைச் சொற்களையே கையாண்டு தமிழில் கற்றுக் கொடுக்கலாம். அறிஞரைவிடத் தொழிலாளிகள் நல்ல சொற்களை ஆக்கிக் கொள்வார்கள். அவர்கள் அனுபவ உலகத்தில் இருப்பவர்களாதலால் அவர்களின் உதவியுடன் அதை எளிதில் செய்ய முடியும். தொடக்கத்தில் நாட்டவர் ஆதரவு தேடியும் மிக எளிதில் விரைவில் தொழில் மூலம் வருவாயையே உண்டு பண்ணியும் மக்கள் ஆர்வத்தைப் பெருக்கலாம்.
இவற்றுள் முதலாவது மொழித்துறை. இதனால் இன்று ஏற்பட்டிருக்கும் பெருஞ்சிக்கல் தூயதனித் தமிழைத்தான் வழங்குதல் வேண்டுமா? அல்லது ஆங்கிலச் சொல்லையே வழங்கலாமா என்பதே. இதில் தமிழ்ப்பண்பு மிக்கது எது என்பதைப் பற்றித் தமிழர்க்குள் இரண்டு கருத்து இருக்க முடியாது. 'தமிழில் முடியுமானால்' தனித்தமிழே சிறந்தது; அதனையே கூடிய மட்டும் வழங்குதல் சிறப்புடையது. தனித்தமிழே வழங்கப்படல் வேண்டும் என்பதைத் தமிழரும் மறுக்க மாட்டார். பிறமொழியாளரும் அவர் தமிழின் பகைவராயிருந்தால் அன்றி மறுக்கமாட்டார். தமிழில் சொல் இல்லாமல், அல்லது காணமுடியாமல் போனால் பிற மொழிச்சொல்லை வழங்குவது சரி என்பது கொள்கையளவில் ஏற்கக்கூடியதே. ஆனால், காரியத்தில் இது சரியன்று, ஏனெனில், உண்மையில் மற்றெம் மொழியையும்விடத் தமிழில் இவ்வாய்ப்பு மிகுதியே. இன்றில்லாவிட்டாலும் தமிழ்ப் புலவர், பொதுமக்கள், தொழிலாளர் ஆகிய மூவரும் அறிவியலறிவுபெறும் காலத்தில்