வளரும் தமிழ்
171
சமயத்துறையில் உள்ள போலிச் சமயப் பண்புகளான மூடநம்பிக்கைகள், சோதிடம், மந்திரம், சகுனப்பலன், இராகுகாலம், குறி முதலியவை பார்த்தல் ஆகியவற்றினால் ஏற்படும் மூட மனப்பான்மையை அகற்ற மேடை, பத்திரிகை, பள்ளிக்கழகங்கள், தமிழ் இலக்கியக் கழகங்கள் ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்துதல் வேண்டும். சங்க இலக்கியக் கால அறிவிய லாக நமக்கு எந்நூலும் எட்டவில்லையாயினும் அக்கால உயர் அறிவியல் பொது அறிவை அவ்விலக்கியம் காட்டுவதுடன், பகுத்தறிவுச் சூழ்நிலையை உலகின் வேறெவ் விலக்கியத்தையும்விட அது மிகுதியாகக் கொண்டுள்ளது என்பதை இலக்கியக் கழகங்கள் எடுத்து விளக்கலாம்.
தமிழ்நாட்டுச் செல்வர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படாத துறைகளில் செலவிடுவதைக் கண்டித்துக் கல்வி அறிவியல் முதலிய நற்றுறைகளில் அவர்கள் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். அறம் என்றும் புண்ணியம் என்றும் சாக்குக் காட்டிச் சோம்பேறிகளுக் கும் ஊதாரி உண்டிக்காரர்க்கும் கொடுக்கும் பணம் அறமுமன்று, புண்ணியமு மாகாது. நாட்டுமக்களால் பழிக்கத்தக்க ஒரு தீச்செயல் என்று அவர்கள் காது செவிடுபட எடுத்துக்காட்டுதல் வேண்டும். தவிர அறிவியல் வளர்ச்சியில் பங்கு கொண்டால் அமெரிக்கா போன்று செல்வமும், இரஷ்யா போன்று நாட்டு வளமும் பெருக்கலாம் என்ற எண்ணத்தையும் அவர்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.
தொழிலாளர்களும் சிறு தொழில் முதலாளிகளும் தாமே அறிவியல் வளர்த்து அறிவியலாளராகும்படி அவர்களுக்கு ஊக்கமும் உதவியும் தரத் தற்காலிகமாக ஆங்கிலச் சொற்களுடனோ, முடிந்தவிடத்துத் தமிழ்ச் சொற்களுடனோ அறிவியற் கல்விதர அறிஞரும் மாணவரும் முன் வரவேண்டும். ஏனெனில் ஆங்கிலம் கற்றவர் அறிவு ஆங்கிலங் கல்லாத தமிழர்க்குக் கொடுத்த பின்தான் நாட்டின் அறிவாகும். அயல்மொழியில் படித்த அறிவு என்றும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். ஒரு புத்தாராய்ச்சியாளரைக்கூட அது கொண்டு தரும் தன்மையுடையதன்று. வடநாட்டில் உள்ள ஜே.ஸி. போஸ், பி.ஸி.ரே, தென்னாட்டு சி.வி. இராமன்