14. உயர் தனிச் செம்மொழி
ஒரு நாடு உலகை நோக்க, பிற நாடுகளைப் பார்க்கப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருத்தல் கூடும். ஆனால், எந்த நாடும் அந்த நாட்டு மக்களுக்கு மிகச் சிறிதாகத் தோற்றும் அளவுக்குச் சிறுமையுடையதாகாது! உலகில் மிகச் சின்னஞ் சிறிய நாட்டிலும் அந்நாட்டின் மக்கள் தம் நாட்டைப் பொன்னெனப் போற்றாதிரார்.மொழியின் நிலையும் இதுவே. ஆனால், இந்தியப் பெருநிலப் பரப்பில் எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்-தம்மொழி, தம்இனம், தம் நாடு ஆகியவற்றின் பெயரைக்கூட ஏற்க நாண மடைந்து வந்திருக்கின்றனர். அதன் பயனாகத் தமிழினத்தவர் பலர் என்று
படிப்படியாகத் தம்மை வேறினத்தவர் கொள்ளலாயினர். தமிழகத்திலும் உயர்வகுப்பார் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பலர். தாம் தமிழர் அல்லர் ஆரியர் என்று கூறிக்கொள்ளவும், தம் பெயரைப் பிறமொழிகளில் கொண்டும் பிற நாட்டுமக்கள் ஒலிமுறை, சொற்கள், மொழிகள் ஆகியவை பேணியும், தமக்கு மேம்பாடு தேடுவாராயினர், அறிவூழியாகிய இவ்வூழியில், தம்மினம் மறுத்த பிற மொழியாளர்கூடத் தம்மொழியைப் பேணி அதிலேயே எழுதவும் பேசவும் முனையும் நாளில், தமிழர் மட்டும், அந்தோ, பிறமொழி பேசுதலும் எழுதுதலும் உயர்வென்று கொண்டு வயிற்றுக்காகத் தன்மதிப்பை விற்கும் நிலையிலிருக்கிறார்கள்!
தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவை பற்றி இன்று பழிப்பவர் மட்டுமேயன்றிப் புகழ்பவர்கள் கூட அதன் உள்ளார்ந்த மதிப்பையும் வளத்தையும் நன்கு உணர்வதில்லை! உலக மக்கள் நோக்கில், தமிழ் இன்னும் சிறுமைப்பட்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழின் இன்றைய நிலையையும், தமிழர் இன்றைய நிலையையும் கொண்டு அதனை மேற்போக்காக மதித்து விடுகின்றனர். இன்று உலகில்