பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(176)

||-

அப்பாத்துரையம் - 1

பகுதிகளும் மேற்கோளுரைகளும் தருகின்றன. இவற்றை ஒருசார்பின்றி நோக்கினால் தமிழிலக்கியம் உண்மையில் வடமொழி இலக்கியத்தினும் மற்றெவ்விலக்கியத் தினும் மிக்க தொன்மை யுடையதாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதைக் காணாதிரார்.

ஆகவே, தமிழில் தொன்மை ஒன்றை நோக்கினாலும் உயர் தனிச் செம்மொழிகளுள் அது இடம்பெறத் தக்கது என்பது தெளிவு. ஆனால், அதன் தனிச்சிறப்பு இதனுடன் நின்றுவிட வில்லை. இலக்கியப் பரப்பிலும் இலக்கியச் சிறப்பிலும் அதற்குத் தனி உரிமைகள் உண்டு. அத்தோடு பிற உயர்தனிச் செம் மொழிகள் அனைத்தும் இறந்துபட்ட மொழிகளாயிருக்க, தமிழ் ஒன்றுமட்டும் இன்றும் உயிருடனியங்குவதுடனன்றி, இன்னும் எத்தனையோ தடங்கல்களையும் புறக்கணிப்புகளையும் பூசல்களையும் தாண்டி வளம்பெற்று வளரத்தக்க நிலையை உடையதாகவே இருக்கிறது.

தமிழ், தமிழகம், தமிழிலக்கியம் ஆகியவை பற்றி அறிஞர் உலகில் கூடப் பல தப்பெண்ணங்களும் அறிவுக் குழப்பங்ளும் உண்டு. நாட்டு வரலாறுகள், மொழி ஆராய்ச்சி, பழம் பொருள் ஆராய்ச்சி தற்கால வாழ்வியலாராய்ச்சி (Sociology) ஆகியவற்றின் முடிபுகள் ஒருமுகப்படுத்தப்படின் இவற்றைப் பற்றிய உண்மைகள் விளக்கம் பெறக்கூடும். ஆனால், தமிழகத்திலும் இந்திய மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பொது மக்களிடையே ஆராய்ச்சி முடிவுகள் எளிதில் சென்றெட்டுவ தில்லை. தமிழர்களின் இன்றைய அவல நிலையும் தமிழகத்தின் அடிமைச் சூழ்நிலைச் செறிவும் இவ்வகையில் அறியாமைத் திரையோடு மேலும் இருட்டடிப்புத் திரையிட்டு வருகின்றன.

மேனாட்டினர் உள்ளத்தில் இலக்கிய வளமுடைய மொழி என்றாலும் தாய்மொழி என்றாலும் அது தற்காலப் புதுமொழி என்றே பொருள்படும். ஏனெனில், உலகில் தற்கால மொழிகள் கிட்டத்தட்ட அனைத்தும் இலக்கிய அளவில் ஒன்றிரண்டு அல்லது நான்கு நூற்றாண்டுக் கால வாழ்வே உடையவை. நேர்மாறாகப் பண்டைய மொழிகள் எனப்படுபவை ஆயிரமாண்டு முதல் மூவாயிரமாண்டுவரை முற்பட்ட மொழிகள். ஆனால், வை யாவும் (சீனமொழி நீங்கலாக) இறந்துபட்ட மொழிகளே.