பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[181

இருந்ததென்பதைத் தொல்காப்பிய மூலமும் உரைகள், மேற்கோள்கள் மூலமும் காண்டலாகும். அத்தோடு அகத்தியம் போன்ற முத்தமிழ் இலக்கணம் கிடைக்காவிடினும் சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ் இலக்கியம் இருந்ததென்பது வெள்ளிடை மலை. அம்முத்தமிழ் கடைச்சங்கக் காலத்திலேயே பாராட்டுதல் ல்லாமையால் பெரிதும் மங்கிவிட்டது. சோழப் பேரரசர் ஆட்சிக்குள் அழிந்து தடமற்றுப் போயிற்று. கடைச்சங்க லக்கிய காலம்கூடப் பண்டைத் தமிழிலக்கிய வாழ்வின் நிறைவுக்காலமன்று, நலிவு தொடங்கிவிட்ட கரும்பொற் காலமே என்றும், அதற்குமுன் வெண்பொற்காலமும் செம்பொற் காலமும் இருந்திருத்தல் வேண்டும் என்றும் அறியலாம்.

முத்தமிழ் வாழ்வு

பண்டைத் தமிழர் போற்றிப் பெருமை கொண்ட முத்தமிழில் ஒரு தமிழான இயலை மட்டுமே இன்று நாம் போற்றிப் பெருமை கொள்கிறோம். இதுவும் சங்ககாலத்துக்கு முன்னிருந்தே தேய்ந்து வந்துள்ளதேயன்றி வளர்ந்து வரவில்லை. பின்னாளைய இலக்கணப் புலவர்கள் தமிழிலக்கணத்தை ஐந்திலக் கணமாக வகுத்தனர். அவ்வைந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது. தொல்காப்பியத்தில் பிரிவுகள் மூன்றாயினும் இவ்வைந்து பகுதிகளும் உள்ளன, ஆனால், வடமொழியில் அகத்தியத் தோடிணையாகச் சைவப் புலவர் களால் குறிக்கப்படும் பாணினியத்தில் எழுத்தும் சொல்லுமே உண்டு. வடமொழி யாளர் தமிழகத் தொடர்பு கொண்ட பின்னரே, யாப்பியலும் அணியியலும் விரிக்கப் பட்டன வாதலால் அவை பாணினி மரபில்வந்த இலக்கணத்துக்குப் புறம்பாக யாக்கப்பட்டன. தமிழகத் தொடர்பு ஏற்படுமுன் வேத மொழியில் சில சமயநூல்கள் இருந்தனவேயன்றி வடமொழி என்ற இலக்கிய மொழியும் இலக்கியமும் தோன்றவில்லை யாதலால் பாணினிக்குப் பேச்சு மொழியின் இலக்கணமாகிய எழுத்தும் சொல்லும் மட்டுமே தேவைப்பட்டது. எழுது, எழுத்து என்ற சொல்லே பாணினிக்கு முன் கையாளப்படவில்லை என்பது அறிஞர் கூற்று.