182
உயர்கலைப் பண்பு
அப்பாத்துரையம் - 1
சங்க இலக்கியத்தின் இன்னொரு மாண்பு உயர்கலைப் பண்பாடு. கிரேக்க இலக்கியத்தின் வடிவமைப்பும் செறிவும் தூய்மையும் இதில் களிநடம்புரிகின்றன. இன்று இது உலகில் அறியப்படாதது சங்ககாலத் தமிழின் குற்றமன்று; இன்றைய 'அறிவுலகின்' குற்றம். கிரேக்க இலக்கியம் இருட்கால மேனாட்டில் பட்டபாடுதான் இன்று தமிழ்ச் செம்மைக்கால இலக்கியம் இக்காலத்தில்படுகிறது.
கலைக்கோப்பும் கட்டுப்பாடும் உடைய கவிதை பாலை நீர் ஊற்று போல் எளிதாகவோ பாறை நீரூற்றுப்போல் அரும்பெறலாகவோ இருக்கலாம். சங்க காலத்தில் பழம் பாடல்கள் பல முந்திய வகை. பிற பிந்திய வகை. ஆனால், இரண்டிலும் உயர்கலைப் பண்பு உண்டு. இடைக்காலத் தமிழ் நூல்கள் கற்பவர் அறிவு நிலைக்கோ, இடைக்கால மொழியாகிய வடமொழி கற்பவர் அறிவு நிலைக்கோ இது எட்டாதது. தற்கால வட ஐரோப்பியக் கலைஞர்கள் நெறி களையும் கிரேக்க இலக்கிய நெறிகளையும் கற்றுத் தீட்டப்பட்ட கலைப் பண்பாட் டுடன் செல்பவர்க்கு அவை யெல்லாம் கோபுரவாயில்களாகவும், தமிழ் இலக்கியம் கோவிலாகவும் காணப்படும். இவ்வுயரிய கட்டுக்கோப்பின் ஆராய்ச்சியே ஐந்திணை நெறியாக இலக்கணங்களில் வகுக்கப்பட்டது. இது முழு அளவில் தமிழ்க்கே சிறப்பானது. கிரேக்க மொழியின் பண்பில் இதன் ஒரு கூற்றைக் காணலாம். பாட்டின் உவமையும் சொல்லும் வாழ்க்கையுடனும் இயற்கை யுடனும் இயைந்ததாயிருத்தல் வேண்டும் என்பதே திணைநெறியின் அடிப்படையாகும்.
சமய ஒப்புரவு
இன்றைய உலகுக்கு, சிறப்பாக இந்திய வாழ்வுக்குத் தமிழிலக்கியம் மற்றொரு படிப்பினை தருகின்றது. இந்தியாவின் சமய வாழ்வைப் படம் பிடித்து எல்லாச் சமயங்களையும் எல்லாச் சமய இயக்கங்களையும் உட்கொண்ட இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. இவ்வகையில் இதனோடு ஒருபுடைச் சார்பேனும் உடையது கன்னடம் ஒன்றே. தவிர சமயங்களனைத்துக்கும் இன்றும் பொது மறையாயிருக்கும் திருக்குறளும் சமயச் சார்பற்ற