பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. தமிழ் வாழ்க!

நம் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், மேடைகளிலும் சில ஆண்டுகளாகத் தமிழ் வாழ்க என்ற முழக்கம் வானைப் பிளக்கின்றது. தமிழர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரங்களிலும் இம் முழக்கம் வரவேற்பு நன்மொழியாக வழங்கப்பட்டு வருவதையும் நாம் காணுகிறோம்.

தெரு மூலைகளிலும், சந்திச் சுவர்களிலும், மரப்பட்டை களிலும், வீட்டுக் கதவுகளிலும், எங்கும் 'தமிழ் வாழ்க' என்ற வாசகம் காட்சி தருகின்றது. சிறிதாகவும் பெரிதாகவும், சில சமயம் கொட்டை எழுத்துகளிலும் அவை தீட்டப்பெற்று விளங்கு கின்றன. கரி, காவிக் கட்டி, சாக்பீஸ் முதலியன பலவும் எழுதுவதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடக் கரும்பலகைகள், மேசை, நாற்காலிகள் முதலியவற்றில் மட்டுமின்றிப் புத்தகங்கள், தேர்வுத்தாள், விடைத்தாள்கள் பலவற்றிலும் இத் தொடர் பொறிக்கப்பட்டு விளங்குவதையும் காணுகின்றோம்.

இவ்வாறு எங்கும் நிறைந்திருப்பதாகவும், பெரியவர்கள் மட்டுமல்லர், சிறுவர், சிறுமியரும் ஆர்வமுடன் முழக்கஞ் செய்து வருவதாகவும் உள்ள இத்தொடரின் வரலாறு என்ன? இதன் உட்பொருள் யாது? என ஆராய்வது அவசியம் அல்லவா?

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், 'என்ன இது! நாம் பேசி வருகின்ற மொழி வாழ்க என்பதுதானே அதன் விளக்கம்; இதிலே விளக்குவதற்கு வேறு என்ன இருக்கிறது?' என்று தோற்றலாம். ஆனால், இதனால் ஒருவகை மறுப்பும், வற்புறுத்தலும் ஏற்பட்டிருக்கின்றன; ஏற்பட்டும்விட்டன. அதனை ஒருவாறு ஆராய்வதே - அதன் தோற்றம், வளர்ச்சி, பெருக்கம் ஆகியவற்றை அவற்றின் மூலக்காரணங்களை ஒருவாறு அறிய முயல்வதே இந்நூலின் நோக்கமாகும்.