186
அப்பாத்துரையம் - 1
‘தமிழ் வாழ்க' என்று முழக்கிவரும் சிறுவருளே சிலர் அத் தொடரின்கண் உள்ள இரு சிறப்பு 'ழ'கரங்களையும் சரிவர எழுதத் தெரியாதவர்களாகக்கூட இருக்கிறார்கள். பல தேர்வுத் தாள்களில் ‘ழ’கரத்திற்கு மாறாக 'ள' கரமும் 'ல' கரமும் எழுதிவிடுகின்றனர். நகைப்புக்கு இடந்தரும் வகையிலே 'தமிள் வாள்க' 'தமில் வால்க' என்றெல்லாங்கூடச் சிலர் எழுதுகின்றனர். வற்றைக் கண்டு சினங்கொள்வாரும், ஏளனங் கூறுவாரும், நகையாடுவாரும் உளர். ஆனால், இம் மூவகையினருமே, இப் பிழை செய்வாருள்ளும் மறைந்து அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலும் புதைந்து கிடக்கும் ஓர் அரிய உண்மையை உணர்ந்தார்களில்லை. உணர்ந்தால், இம் முழக்கத்தின் தனிச் சிறப்பு அவர்களுக்கு விளங்கும். அஃது என்ன? ஆசிரியர் போதனையும், இலக்கண மரபுகளும் செல்லாத உள்ளங்களிலுங் கூடத் 'தமிழ் வாழ்க' என்ற இயக்கத்தின் ஆற்றல் சென்று வேரூன்றிவிட்டது என்பதே அதனால் நாம் அறியக் கூடியது. அதுமட்டுமன்று; தமிழறிவு தானும் இந்தத் தமிழ் உணர்ச்சி வேகத்துக்கு ஒப்பாகச் செயலாற்ற முடியவில்லை என்பதையும் இந்நிலை காட்டுகின்றது. தமிழ் நாட்டிலிருக்கும் தமிழுணர்ச்சி யளவுக்குத் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் வேலை செய்யமுடியவில்லை என்றும், போதிய அளவு அரசாங்கமும் ஒத்துழைக்க முன்வரவில்லை என்றுமே இதனால் கூறலாம்.
தமிழ் வாழ்க என்ற தொடரின் - முழக்கத்தின் - ஆற்றலை இன்னொரு வகையாகவும் மதிப்பிடலாம். தமிழ்நாட்டிலே வாழ்கின்ற பல்வேறு பிரிவினரிடையேயும் ஒற்றுமை காண, உணர்ச்சி காண, உயிர்காண முனைந்த இயக்கங்களும், கட்சிகளும் பல; அரசியலாரின் முயற்சிகளும் பல.
அரசியலாரின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராயின. கூட்டுறவு இயக்கத்தை அவர்கள் தொடங்கினர். ஆனால், அது நொண்டி நொண்டித் தளர்நடையிலேயே செயலாற்றிவருகின்றது; செயலாற்ற முயல்கிறது. நாட்டு இயக்கமாக மக்கள் உளங்களிலே வேரூன்றி, மக்கள் இயக்கம் என்ற அளவுக்கு அது வளரவில்லை; வளரும் என்பதற்கான அறிகுறிகளும் போதிய அளவுக்கு இல்லை.