தமிழ் முழக்கம்
[187
சீர்திருத்தம் என்ற பெயரால் நீதிக் கட்சி முயன்று பார்த்தது; ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், அதுவும் மின்னொளிபோல் தோன்றி மறையும் நிலையில் விளங்கியதே யன்றி நிலையான ஒளியுடன் விளங்கவில்லை. மேலும், அம் மின்னொளிதானும் அதன் தோற்றத்துக்கு முன்னிருந்த காரிருளிற் கலந்து முன்னையிலும் பன்மடங்கு இருண்ட நிலையையே தந்தது.
'காங்கிரசு' எனும் நாட்டுக் கழகக் கட்சி வரிந்து கட்டிக்கொண்டு முன்வந்தது. பெரு முழக்கமும் செய்தது.ஆனால் அதுவும் சாதி சமய வகுப்பு வாதங்களாகப் பல்வேறு சுழிகளிலே அகப்பட்டுத் தன் வலி குன்றியது. இன்றோ அரசியற் சூழ்ச்சியாகிய மலைப் பாறையிலே மோதிச் சின்னாபின்னமுற்றுச் சிதறுண்டு விளங்குகின்றது. இப் பெருங் கட்சிகளுக்கு இடையிலே வேறு பல சமயக் கட்சிகளும், சீர்திருத்தக் கட்சிகளும் முனைந்து வேலை செய்தன. அவற்றாலும் பல்வேறு துறையில் பட்ட தமிழ் நாட்டினரை ஒற்றுமைப்படுத்த இயலவில்லை. ஓருயிரும், ஒரு மொழியும், ஒரு மனமும் தந்து, 'ஒரே நாட்டினராக’ ஒற்றுமையுடையவர்களாக, ஆக்க முடியவில்லை.
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? இந்த இயக்கங்கள் எதுவும், வேறுபட்டு நின்ற இந் நாட்டினரின் ‘வாழ்வு' ஆகிய உடலின் உள்ளே அமைந்து கிடக்கும் உயிர் நாடியை உணர்ந்து, அவர்களுக்கு உயிர்ப்பும், ஒற்றுமையும் தரமுடியாது போயின என்பதேயாகும்.
இந் நிலையிலேதான் எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது ஒரு முழக்கம். அதனையடுத்து நாற்றிசைகளினின்றும் 'தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!' என்ற குரல்கள் இரைந்தெழுந்து முழங்கின. தமிழ் வாழ்க! பொங்குக பொங்கல்! தமிழ் வாழ்வு மலர்க! எனப் பல்வேறு உருவிலே அம் முழக்கம் பரவியது.நாட்டினர் காதுகளிலே, இனிய குழப்பமோ, குழம்பிய இனிமையோ? எனும்படி வந்து தாக்கியது.
தமிழ், தமிழ் மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ் நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய், வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோடலாயிற்று. 'ஒற்றுமை’ என்ற சிந்தனையே வேண்டாத அளவு நாடெங்கும் நாட்டினர்