இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. தமிழர் வாழ்க!
தமிழ் வாழ்க! எனும் மந்திரத்தினைப் பற்றிச் சிறிது கூறினோம்.இனி,அம் மந்திரத்தையே பல்லவியாகக் கொண்டு, அதன் கிளைகள்,அல்லது பகுதிகள், அல்லது சரணங்கள் என்ற ஆறு வகைகளைப் பற்றியும் தனித்தனி ஆராய்வோம். அவற்றில் முதலாவது 'தமிழர் வாழ்க!' என்பது.
தமிழ் வாழவேண்டுமாயின் தமிழர் வாழ்தல் வேண்டும். ஆதலின், 'தமிழர் வாழ்க' என்பதும் பொருள் பொதிந்த தொடரேயாகும்.
தமிழ், தமிழர் இரண்டுக்கும் உள்ள உறவு யாது? தமிழ் உயிர்; தமிழர் உடல் உடலின்றி உயிர்க்கு வாழ்வில்லை. உயிரின் ஒவ்வோர் வளர்ச்சியும் உடல் வளர்ச்சியோடு தொடர்பு கொண்டன்றிச் செயற்படாது. அசைவு, செயல், உணவு எதுவும் உடல் மூலமாகவன்றி உயிர் ஒன்றினால் மட்டும் தனித்து மேற்கொள்ள முடியாது. ஆகவே, தமிழர் ஆகிய உடல் நலமாகச் செழிப்புடன் வாழ்ந்தாலன்றித் ‘தமிழ்' ஆகிய உயிர் வளர்ச்சியும் ஆக்கமும் பெறாது என அறிந்துகொள்ளுதல் வேண்டும். தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து புகழ் உடம்பு எய்திய மக்கள் தொகையினர் கணக்கற்றோர். அவர்கள் உடல் அழியினும் அழியாது நின்றன எவை? அவர்கள் வாழ்வின் குறிக்கோளும், நோக்கமும், உட்கருத்தும், பயனும் ஆகியிலங்கும் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களுமேயன்றோ! அவர்கள் தம்மொழியில் தங்கள் அறிவை எல்லாம் ஒருங்கேயன்றோ கொட்டிவைத்துப் போயிருக்கின்றனர்! அந்தச் செறிந்த சேம வைப்பையே நாம் இன்று ‘தமிழர் இலக்கியம்' என்கிறோம்.அது வளர்தல் வேண்டும்.ஊக்கமும் உயிர்ப்பும் உடையதாக ஓங்குதல் வேண்டும்.அதற்கு என்ன செய்வது?