பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

அப்பாத்துரையம் 1

ன்று

அதனுடன் தமிழரின் இன்றைய அறிவு, அனுபவம், உணர்ச்சி, ஆர்வம் முதலிய அனைத்தும் சென்று இணைதல் வேண்டும். அவ்வாறு இணைந்து சிறப்பு அடைய, இருப்பதுபோல் தமிழர் நலிந்து கிடந்தால் போதுமா? போதாது. ஆகவே, தமிழ் வாழவேண்டின், தமிழ் மேம்பட வேண்டின், தமிழ் ஓங்கவேண்டின், 'தமிழர் வாழ்க! தமிழர் மேம்படுக! தமிழர் ஓங்குக!' என்ற முழக்கம் எங்கும் எழுதல் வேண்டும்.

அங்ஙனமாயின் தமிழர் யார்?

தமிழ் பேசுவோர் தமிழர். இந்த விடை எளிதானதாகவே தோற்றும்.

ஓரளவு

ஆம்; தமிழ் பேசுவோர் எல்லாரும் தமிழர்தாம்! ஆனால், இஃது உண்மையில் ஒரு சரியான விடையாகுமா? ஆகவே ஆகாது. ஏனெனில், தமிழ் யாதென்று கேட்பார்க்கு அவ் விடையையே மாற்றித் 'தமிழர் பேசுகிற மொழி தமிழ்' என்றுதான் கூறவேண்டியதாக இருக்கிறது.

ஒருவகையில் ‘தமிழர்', தமிழ் இரண்டுமே அவ்வளவு மாறாதிருக்கும் நிலையான பொருள்கள் அல்ல. தமிழர் பிறந்தனர்; பிறந்து வாழ்ந்து இறந்தும் போயினர். தமிழர் இன்றும் பிறக்கின்றனர். வாழ்கின்றனர்; இறந்து போகவும் செய்வர். இவர்களை இணைப்பது, ஒரே தொடர்புடைய மக்கள் வழியினராக ஆக்குவது, 'தமிழ்' ஒன்றேயாகும்.

ஆனால், மாறுவது தமிழர் மட்டுமா? எனில், இல்லை. தமிழும் அவ்வாறே காலந்தோறும் மாறுதலடையத்தான் செய்கிறது. மொழியிலே பேதங்கள் ஏற்படுகின்றன; மாற்றங்கள் நேர்கின்றன. நூல்கள், இலக்கணங்கள், சொற்கள், நடையிலே மாற்றம் ஆகிய பல வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இம் மாற்றங்களை இணைப்பது எது? 'தமிழர்' என்ற ஒரு தொடர்ந்த இனமும், அதன் கால்வழியுமேயாம்.

ஆகவே, நம் வரையறை வன்மை கெடுகின்றது. தமிழர் யார்? தமிழ் பேசுவோர் எனின், தமிழ் யாது? என்று கேட்பின் தமிழர் பேசுவது என்றே கூறவேண்டியதிருக்கிறது.

இங்ஙனம் ஒரு வினாவுக்கு மற்றொரு வினாவையே விடையாகக் கூறுதல் பொருந்துமா? பொருந்தாது.