பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

3. தமிழ்த்தாய் வாழ்க!

'தமிழ் வாழ்க!' மந்திரத்தின் ஆற்றலைக் காட்டினோம். அம் மந்திரம் செவியினுள் புகுந்ததுமே, தமிழர்க்குக் கிளர்ச்சியும் ஊக்கமும் தந்தது. புத்துயிரூட்டும் அதன் தலை மந்திரம் “தமிழர் வாழ்க” என்பது. அதன் உள்ளுறை பொருளையும் ஓரளவு ஆராய்ந்தோம்.

ஒற்றுமை யுணர்ச்சியற்று, வந்தேறுங் குடியினர்க்கெல்லாம் வந்த மொழியினர்க்கெல்லாம் - நாகரிகங்களுக்கெல்லாம் அடிமைப்பட்டுத் தாமே தம்மருமை தெரியாது கெட்டு நின்ற தமிழர்க்கு, இம் மந்திரம் எப்படி ஒற்றுமையும் உயிர்ப்பும் ஊட்டியது என்பதை இனி ஆராய்வோம்.

இதற்கு முன், நாட்டு மக்கள் வாழ்வைத் தட்டி எழுப்பிய மந்திரங்க ளெல்லாம் இம் மந்திரத்தளவு ஆழ்ந்து அகன்று மக்கள் வாழ்வைத் துருவித் துருவித் துறைதோறும் எட்டவில்லை. இதன் காரணம் யாது?

இதற்கு முன் எழுந்த மந்திரங்கள் பிறமொழிப் போர்வை யுடனோ அல்லது பிறமொழி உணர்ச்சியுடனோ பயிற்றுவிக்கப் பட்டன. அதனால், தமிழர் உள்ளத்தின் ஆழத்தை எட்டிப் பார்க்க முடியவில்லை. மேலும், அவை மக்கள் அனைவரையும் ஒருங்கே இயக்கவும் முடியாது.ஏன் எனில், சமயச் சூழல், கட்சிச் சூழல், மொழிச் சூழல் தன்னலச் சூழல்களிற் சிக்கி அவை அழிவுற்றன. "தமிழ் வாழ்க” மந்திரம் தமிழ் மந்திரமாதலின், தமிழர் உள்ளத்தின் தனித் தனியிடங்கள் தோறும் சென்று, தன் செவ்வொளி பரப்பி, இன்ப ஊற்றளிக்க வல்லதாயிற்று. அதனுடன் அது முழுத்தமிழ் மந்திரமாதலின், தமிழருள் எவரையும் சமய வேற்றுமை காட்டியோ, கட்சி வேற்றுமை காட்டியோ, பிறப்பு வேற்றுமை காட்டியோ விலக்காது,

ன்