தமிழ் முழக்கம்
[205
கழகங்களாய் விளங்குதல் வேண்டும். ஆங்கிலம், இந்தி முதலியவை கட்டாயப் பாடமாக இராமல், தமிழ் கட்டாயப் பாடமாகவும், கூடுதலான நேரத் திட்டமுடையதாகவும், பிற விருப்பப் பாடமாய் அருகலாகவும் இருத்தல் வேண்டும். அதோடு பாடம் கற்பிப்பவர் அனைவரும் தமிழ்ப்புலவர் தேர்வுடையவர் களாகவும், ஆங்கிலம், வடமொழி முதலிய பிறமொழிகள் கற்பிப்பவரும்கூடத் தமிழில் இளம்புலமை (வித்துவான் முதனிலை) அல்லது புலமை (வித்துவான் முடிவுநிலை) உடையவராயும் இருத்தல் இன்றியமையாத தகுதி என ஆதல் வேண்டும்.
ஊதிய வகையிலும், இன்றிருப்பதுபோல் ஆங்கில ஆசிரியர்க்கு நூற்றுக் கணக்கிலும், கணக்கிலும், வடமொழி இந்தி ஆசிரியர்க்கு ஐம்பது அறுபதுக் கணக்கிலும், தமிழாசிரியர்க்கு முப்பது நாற்பதுக் கணக்கிலும் தரப்படாமல் தமிழாசிரியர்க்கு நூற்றுக் கணக்கிலும், அடுத்தபடி வடமொழி, இந்தி ஆசிரியர்க்கும், ஆங்கில ஆசிரியர்க்கு நாற்பது ஐம்பது கணக்கிலும் தரப்படுதல் வேண்டும். ஆசிரியரிடைத் தலைமை யாசிரியராகும் உரிமையும் உயர்வும் சிறப்பாகத் தமிழ்ப் புலமையுடைய வருக்கே இருத்தல் வேண்டும்.
இன்னும் கல்வி, உண்மையில் ஒன்றிரண்டு குலத்தார்களுக் குள்ளேயோ, செல்வரிடையேயோ கட்டுப்பட்டிருக்கக்கூடாது. இந் நாட்டில் பிறப்புக் கட்டுப்பாடு, சாதிப் பாகுபாடு மிகுதி. போதாக்குறைக்கு வறுமை மிக்க இந்நாட்டில் கல்விச் செலவோ மிகுதியாக விளங்கிச் செல்வர் மட்டுமே கற்க இடம் தருகின்றது. தவறி ஏழை கற்றாலும் பிழைப்புக்கு வேறு இடமில்லை. அரசியற் பணிகளுள் உயர்குலத்தார் எளிதில் தம் செல்வாக்கால் இடம் பெறுவர், செல்வரும் பெறுவர். ஏழை 'பெண்டாட்டி கட்டியும் பிரமச்சாரி' என்ற வகையில், ‘பிள்ளை பெற்றாலும் மலடி' என்ற வகையில், கற்றாலும் கல்லாருடனொப்பச் சிலவகையில் கல்லாதவர் நலன்களையும் இழந்து திரிய வேண்டியதுதான். இந்நிலைமை மாற வேண்டுமானால், கல்விக்குப் பள்ளிச் சம்பளம் என்ற ஒன்றின்றி, வருமானவரி, நிலவரி முதலியவற்றைப் போல் வரியிட்டுப் பணம் பெற்றுக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். எல்லார்க்கும் ஒரே வாய்ப்பு அளித்தால், ஏழைகள் செல்வரோடொத்து உயர்ந்து உலக நலனேற்படுத்துவர்.