பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

207

குறிப்பர். இன்றும் ஆந்திரம் தனியாகவும், பிற தமிழ்க் குழு மொழிகள் அனைத்தும் தெலுங்கு அல்லது ஆந்திரத்தைச் சாராது தமிழையே சார்ந்து நிற்கின்றன என்றும் காட்டுவர் பேரறிஞர் கால்டுவெல். ஆகவே, தெலுங்கு நீங்கிய தமிழ்க்குழு மொழிகள் தமிழ்க் குழுவுட்பட்ட தமிழ்க் கிளைக் குழுவாதல் காண்க. இக்கிளையிலும் மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள் தம்முள் ஒத்துத் தழுவி அவற்றின் இணைப்பாயிருப்ப தால், தமிழ் அக்கிளைக் குழுவின் தாய்மொழி என்பதும், அதேபோன்று அக் கிளைக்குழுவின் எல்லா மொழிகளுக்கும், தெலுங்குக்கும் உள்ள உறவினும் தமிழ் அவ்வெல்லாவற்றுடனும் தெலுங்குடனும் கொண்ட உறவே மிகுந்திருப்பதால், தமிழ் தமிழ்க் குழுவின் நடு நாயகமான மொழி - அவை யனைத்தையும் ணைக்கும் தாய்மொழி - என்பதும் தெளிவாகும்.

அதற்கியைய இம் மொழியின் வரலாறும் இலக்கியமும் அவற்றினும் பன்மடங்கு பழைமையும் சிறப்பும் பொருந்தியதாகும்.

எனவே, தமிழ் தமிழரின் தாய்மொழி மட்டுமன்று, தமிழ்க் கிளைக்குழுவின் தாய்மொழியும், தமிழ்க் குழுவினரின் தாய்மொழியும் ஆம். ஆதலால், இதனுக்குத் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, கன்னட, துளுநாட்டு உயர்தரக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், அவ்வந்நாட்டுத் தாய்மொழிகளின் தாயகமொழி என்ற வகையில் ஆராய்ச்சிப் பகுதிகள் அமைதல் இன்றியமை யாததாகும்.

தமிழ்க் குழுவின் சிதறிய பல துண்டங்கள் குடகு, மைசூர், சோட்டா நாக்பூர், பீகார், வங்காளம், பலுச்சிஸ்தானம் முதலிய இடங்களிலிருப்பதும், இவையனைத்தும் தமிழ்க் குழுவை ஒக்குமிடங்களிலெல்லாம் தம்முள்ளோ பக்கத்திலிருக்கும் பெருந்தமிழ்க் குழுமொழிகளுடனோ கொண்ட உறவினும், தமிழினையே மிகுதியாக ஒத்திருப்பதும் நோக்க, இத் தமிழ்க்குழு ஒருகால் இந்தியா முழுமையும் பரந்து கிடந்ததொன்றென்பதும், அதன் மாபெரும் தாய் தமிழாமென்பதும் தேற்றம். ஹரப்பா, மொகஞ்சதாரோவில் வெட்டியெடுத்த பழம்பொருள் ஆராய்ச்சியாலும் இது நன்கு உறுதிப்படுவதாகும்.