பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் - 1

எனவே, இந்தியாவின் ஒரு பகுதியில் பேசப்படுவதும், பல பகுதிகளிற் பண்படாத் தொன்மொழிகளை உடையதும், பண்டைக் காலத்தில் இந்தியா வெங்கும் செறிந்ததும், இந்திய மொழிக்குழாங்களுள் தொன்மை மிக்கதும் ஆன இத் தமிழ்க் குழுவின் ஆராய்ச்சி, இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் அனைத்தினுக்குமே உரியதாம். அக் குழுவின் தாயகமொழி என்ற முறையிலும், இந்தியாவின் தொன்மை மிக்க மொழி என்ற வகையிலும், இந்தியாவின் சமய விரிவுகள் அனைத்துக்கும் தோற்றுவாயும் தாயகமுமான சமய இலக்கிய உயர்வுடைய மொழி என்ற வகையிலும், இந்தியரனைவரும் வடமொழியினும் மேம்படத் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தல் கடனாகும். அணிமையில் வடபுல மொழிகளாம் இந்தி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி ஆகியவற்றின் மொழியாராய்ச்சியாளர், அவற்றில் ஆரியமல்லாப் பகுதி - திராவிடச் சார்பான பகுதிகள் - மிகுதியிருப்பதாகக் கூறுவதும், ஒலிப்போக்கு, ஒலிச்சிதைவு, இலக்கண அமைப்பு, ஒழுங்கு ஆகிய வகையில் அவை மட்டுமின்றி வடமொழி தானும் பிற ஆரிய மொழியினும் தமிழை, தமிழ்க்குழுவை ஒட்டியிருப்பதுங் காண, அவ் வட இந்தியத் தாய் மொழியாளர்க்கும், வட மொழியாளர்க்குங்கூடத் தமிழ் தாயக மொழியாய்த் திகழ்தல் கண்கூடு.

இன்னும், பிறநாட்டு மொழிகளும், ஆரியம் முதலிய பிற மொழிக் குழுக்களும், குழுமொழிகளும், கிளைக் குழுக்களும் தம்முள் எல்லா விடங்களிலும் தமிழை ஒத்திருப்பது காட்டியும், அவ்வெல்லாக் குழுவினுக்கும் மொழிகளுக்கும் தமிழ் இணைப்பு மொழியாய்ப் பாலம்போல் அமைந்திருப்பது காட்டியும், கால்டுவெல் தலைமகனார், தமிழே, தமிழ்க் குழுவே உலகின் முதல் தாய்மொழியாம் என்றும் விளக்கிப் போந்தனர். அண்மையில் ‘தற்காலத் தொகுப்பு' (மாடர்ன் ரிவீயூ) என்ற திங்களிதழிலும், ‘இந்தியப் படவாரப் பதிப்பிலும்', (இல்லஸ்டிரேட்டட்வீக்லி ஆப் இந்தியா) அமெரிக்கா, ஆப்பிரிக்கா மக்கட் குழுவினரின் நாகரிகங்கள் வியக்கத்தக்க முறையில் தென்னாட்டு நாகரிகத்தை ஒத்திருக்கின்றன குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.

என்று