216
அப்பாத்துரையம் - 1
நிறமான கடல்” என்ற பல்லக்குக் கொம்பு போன்ற அருவருப்பான தொடர்களுக்கு மூலமாய் நின்றது.
>
பழந்தமிழில் புதுக் கருத்துகளைக் குறிக்கப் புதுச் சொற்கள் எவ்வளவோ எளிதாக இயற்றப்பட்டன எனக் காட்டலாம். ஆடுபவனை அல்லது ஆடுவதை 'ஆடி' என்றனர். நிழலையுடையது என்பதற்கு ‘நிழற்று' என்றனர். உத்திராடத்தில் பிறந்தவனுக்கு ‘உத்திராடத்தான்' என்றனர்.
மேலும் வாசகங்களில் எழுவாய் பயனிலைத் தொடர்பைக் காட்டும் பால் விகுதிகளைத் தமிழினின்று இந்திகூட எடுத்துக் கொண்டுள்ளது.வினைகள் ஒன்றையொன்று தொடரும்போது முன்னது வினையெச்சமாம் வழக்கை வடமொழி தமிழினின்றே கற்றுக்கொண்டது என்னல் வேண்டும். ஏனெனில், அத்தகைய வழக்கு பிற ஆரிய மொழிகளில் இல்லை.
தமிழ்ச் சொற்களின் நயத்துக்கும் பொருள் வளத்துக்கும் சில எடுத்துக்காட்டுகள் தருவோம். தொண்ணூற்றாறு தத்துவங்களையும் கடந்து நின்ற பொருளைத் தமிழர் 'கடவுள்' என்றனர். வலஞ் சுழிக்கும் வட்டத்தை ‘வலயம்' என்றனர். மற்றும் வினைப் பகுதிகளினின்று தொழிற் பெயரும், ஆகுபெயரும் உண்டுபண்ணத் தமிழில் இருக்கும் விகுதிகள் எண்ணிறந்தன.
இவ்வளவையும் வைத்துக்கொண்டு, இன்று தமிழ் மாணவர், ஆசிரியர், நூலாசிரியர் முதலியோர் சிறுசிறு கருத்துகளை - ஆங்கிலச் சொற்கள் அல்லது வடமொழிச் சொற்கள் குறிக்கும் கருத்துகளைத் தமிழிற் கூற முட்டுப்படுவ தேன்? தமிழ் மரபு இழந்ததனாலும் அதன் பயனாகத் தமிழ் நூற்களை அறியும் திறம் குறைந்ததனாலுமேயாம்.
பழைய சங்க நூல்கள் இன்று உயிருள்ள நடையாய் இல்லை என்று கூறப்படுகின்றது. அவையல்ல உயிரிழந்து வருபவை. நம் கண்கள் காமாலை நோயிற்பட்டு, நம்மரபை மறந்து, நாம் இழந்த உயிரை, அவை இழந்த உயிராகக் காணச் செய்கிறது. ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்ற பழமொழி யுண்டல்லவா? இனியேனும், அச் சங்கநூற் பயிற்சியால் நம் பழக்க வழக்கங் களும் பழந்தமிழின் நாப் பழக்கமும் தமிழர் உளப் பழக்கமும் மிகவும் வளர்ந்து ஓங்குவதாக!