222
அப்பாத்துரையம் - 1
இரண்டாவதாகச் சித்தர் நெறியைப் போல், தம் நாட்டுப் பொருள்களை நேரில் ஆராயாமையினால்தான், அவர்கள் பொருள்களைச் சேமித்து உலர்த்தியும், பொடி செய்தும், வடித்தும் இடர்ப்படவேண்டி வருகின்றது.
சித்தர் நெறி நேரில் பூண்டுகள் சரக்குகள் இவற்றை ஆராய்வதுடன், அவை கிடைக்குமிடங்களையும் மலைவளம், நீர்வளம் என வகுத்துச் சுட்டுகிறது. மருத்துவத்தின் பகுதிகளாக இவற்றுடன் நோய் நிச்சயம், தனிக்குணம், வைப்பு முறை, சேர்மானம், நாடி நிச்சயம், பூண்டுவகை, உப்பு வகை, முப்பு முறை ஆகிய பல கிளைகளை உடையதும் இச்சித்தர் நெறி ஒன்றேயாகும். நேரிடையாக இயற்கையை ஒட்டிய முறையும், தொடக்கக் காலமுதல் ஆராய்ச்சி அனுபவத்தை ஒட்டிய முறையும் வேறு எதிலும் இல்லை.
மேனாட்டு முறைகளில் இன்று மிகுதியும் வழக்காற்றில் இருக்கும் முறை மாற்றுநிலை முறையாம். அது பெரிதும் புற உடல் ஆராய்ச்சியையே நம்பியிருப்ப தாகலின், இயற்கைக்கு மாறான அறுவை மருத்துவத்தையே பெரும்பாலும் தழுவுதல் வேண்டும் நிலையிலுள்ளது. ஆனால், சித்தர் நெறி அறுவை மருத்துவம் இன்றியே எல்லாப் பிணிகளையும் தீர்க்கவல்லது. இன்னும் பல சித்தர் நெறித் தலைவர்கள் அறுவை மருத்துவமின்றியே தற்கால மேனாட்டு மருத்துவத்தினாலும் தீருவதற்கரிய பிணிகளையும் தீர்த்து வருவது கண்கூடு.
அதுமட்டுமன்று; நோயைத் தடுப்பதுடன் மற்றெல்லா முறைகளும் நிற்ப, நோயில்லா வாழ்வு, நோய் எதிர்ப்பு வன்மை, ஆயுள் நீடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில், தற்கால நல்லுணவு முறையைவிட மேம்பட்ட முறைகளடங்கிய ‘கற்பம்’ என்ற தனித்துறையை உடையதும், உலகியல் கடந்த முழுமுதல் நோய்களான பிறப்பு, இறப்பு என்பவற்றைக்கூட வெல்லும் வகை ஆராய்வதும், இத் தமிழர் நெறியல்லால் வேறு இல்லை.
தற்கால மேனாட்டு மருந்துத் துறையினர் தம் செருக்கையும், குறுமனப் பான்மையையும் விடுத்து, இந்நெறியை ஆராய முனைவரேல், உலகில் மருத்துவப் புரட்சியே ஏற்படுமென நான் துணிந்து கூறுவேன்.