பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345

அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியர் முதலியவருமாவர். இவ்வனைவரும் தமிழரைப் போலவே இன்று தம் ஆண்மை கெட்டு நலிந்திருப்பது காண, இவ் வேளாண்மை எவ்வளவு உயர்குணமாயினும், ஒரு வகுப்பினர் உயர்வை ஓரளவு தடை செய்யவோ, ஒரு வேளை முற்றிலும் அழிக்கவோ செய்யும் இயல்பும் உடையது என்னலாம். தமிழ் மக்களுக்குத் தீங்கில்லாமல் இவ் வேளாண்மை நிகழ வேண்டுமாயின், இதில் அன்புடைமை சற்றுங் குறையாமலேயே, அறிவு முறையில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுதல் வேண்டும்.

அவற்றுள் ஒன்று தன்மதிப்பு, தன் மக்களைப் போல் பிற மக்களைப் பேணுதல் வேண்டும் என்ற நீதியைத் தமிழர் மட்டுக்கு மிஞ்சிப் பின்பற்றினர். முகலாய அரசன் உமாயூனைப் போலத் தன்மக்களிலும் பிறமக்களை இவர்கள் உயர்த்தி வருவது யாவரும் காணத்தக்க செய்தியேயாகும்.

இன்று வேளாண்மையுடைய தமிழருக்கு மாறாகத் தாளாண்மை மிக்க பிறமக்கள் தமிழர் வாழ்விலும் சமயத்திலும் புகுந்து பங்கு பெற்று அச்சமயத்தையும் வாழ்வையும் அழிக்க முனைகின்றனர். இப் பிறமக்கள் யாரோ வெனில், தம்மை உயர்ந்தோர் என்று கூறிக்கொள்ளும் சீரியர் அல்லாத சூழ்ச்சிக்காரரே என்பது சொல்லாமலே அமையும். அன்னார் தமக்கு இடங்கொடுத்த தமிழ்ப் பெருமக்களைச் சிறுமைப்ப டுத்தித் தூற்ற, அதனைத் தமிழர் பலர் வாளா ஏற்கும் நிலைமைக்கும் வந்துவிட்டனர்,தமிழர் வேளாண்மையுள் புதைந்து கிடக்கும் தற்கொலைப் பண்பு, வேளாண்மை சிறிதளவும் இல்லாரிடமும் அவர்கள் வேளாண்மை செலுத்துவதே யாகும்.

'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற உண்மையை மறந்த தமிழர் அதன் பயனாக அப் பிச்சைக்காரரின் காலடியிற் கிடந்து, 'வாய்விடா உயிர்கள்போல்' வதங்குகின்றனர்.

அவர்கள் அறம் அவர்களுக்கு வானுலகும், புகழும் தருவதற்கு மாறாக, அவர்கள் தாய்க்குப் பழியும் தந்தையர்க்கு இழிவும் இம் மண்ணுலகிலேயே தந்துள்ளது. அது மட்டுமா? உண்மைக் குடிகாரனும் பழிகாரனும் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.