228
அப்பாத்துரையம் 1
—
அங்ஙனம் பிரித்து வைக்கச் சமயம், அரசியல் கொள்கை முதலிய எதனையும், எவ்வாறாயினும் அவ் “அருள் பிறவிகள்” பயன்படுத்தத் தயங்குவதில்லை.
கடைசியாகத் தமிழர் பண்பில் தலைசிறந்தது பிறப்பு வேற்றுமை பாராட்டாமையேயாகும். கீழ் உயிர்களைக் கொல்லுவதும் கொலையே எனக் கொண்ட தமிழர், மக்களிடையிலேயே ஒரு சாராரைக் ‘கீழ்' என ஒதுக்குவரோ? ஒதுக்கார். மக்களுள் ஒரு சாரார் கீழ்மை உடையவரா யிருந்தாலும்கூட, அவர்களை நேரிடையாகவோ, நயமாகவோ உயர்த்தவே முயற்சிசெய்வர் உண்மைத் தமிழர். இதனைப் பழந்தமிழர் சமய வாழ்வில் நன்கு காணலாம். ஊன் மறுத்த உணவைத் தமிழர் இன்றும் “சைவ” உணவு என்கின்றனர். அவ் ஊன் மறுத்தார் சிவனை வணங்குகின்றனர். ஊன் உண்டு பலியிடுபவர் தெய்வத்துக்கும் தமிழர் சுடலைமாடன், இசைக்காடும் பெருமாள் என்று பெயர் வைத்துள்ளனர். கொஞ்சம் தமிழ் அறிந்த உடனே இவ்விரு தெய்வமும் ஒன்று என்று அவர்கள் ஒரு நெறிப்படுவர் அன்றோ?
இன்று தமிழரிடையே வகுப்பு வேற்றுமை தலைவிரித்தாடு கின்றது. இஃது என்றுமே இப்படி இருந்ததில்லை என்பதைப் பழைய தமிழ் நூல்களால் அறியலாம். ஆனால், தமிழரிடையே இவ்வேற்றுமையைப் புகுத்தியவர் நாட்டில் கூட, இவ்வேற்றுமை தமிழ்நாட்டிலுள்ள அளவு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பிறரைப் பிரித்தால்தானே வாழலாம்; தான் பிரிந்தால் வாழமுடியுமா? எனவேதான், அங்கும் இல்லாத ஒன்றை இங்கு மட்டுமே அவர்கள் புகுத்தினர்.
தமிழ்நாட்டிலும் முன்னாளில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற பிரிவினை இருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. அது வருண வேற்றுமை அன்று. வருண வேற்றுமையா யிருந்தால், அன்று பார்ப்பனர் தம்மையொழிந்த பிறர் அனைவரும் சூத்திரர் (அல்லது தாசி மக்கள்) என்று கூறுவரா? தமிழ் நாட்டரசரும் வணிகரும், நல்ல தமிழராய், இருந்ததனாலன்றோ பார்ப்பனர் அவரைத் தம் வருணப் பாகுபாட்டில் தம்முடன் சேர்க்கவில்லை.