பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு எம் மொழியிலும் இந்தியர் சமய நூல்கள் எழுதியிலர். ஆகவே, சமயத் தொடர்பு தெய்விகத் தன்மையின் அறிகுறியாயின. இந்திய மொழிகளுள் தமிழ்க்குப் புறம்பாக வடமொழி ஒன்றைத் தவிர வேறு எம்மொழிக்கும் அவ் உரிமை கிடையாது என்பது தெளிவு. சைவ வைணவத் திருப்பதிகள், பாடல் பெற்ற இடங்கள், புராணச் செய்திகளுக்கிலக்காகிய மலை, ஆறு, கோவில் முதலிய சின்னங்கள் யாவும், அரும்பெரும் பணி அமைந்த கலைக்கோவில்களும், தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் காணப்படுவதும் இதனை வலியுறுத்தும்.

ஆகவே, வடமொழிக்கு எத்தகைய தெய்வத்தன்மை இருப்பதாகச் சொன்னாலும், அதனைவிடப் பன்மடங்கு தமிழ் தெய்வத்தன்மையுடையது. வடமொழியை இந்தியர் அனைவரும் பேணுவதுபோல், அதனினும் பன்மடங்காகத் தமிழையும் பேணவேண்டுவது இந்திய சமய வளர்ச்சிக்கு இன்றியமை யாததாகும். இதனைத் தமிழர் விரிவாக வலியுறுத்தல் வேண்டும். அங்ஙனம் வலியுறுத்துவதற்கு வெளியிலும் உள்ளிலும் தடை யாகவும், நேரிடையாகவும் மறைமுகமாகவும் எதிராயிருக்கும் தமிழ் நாட்டின் புல்லுருவிகளை ஒழிக்கும் அளவுக்குத் தமிழ்க்காதல் வளர்தல் வேண்டும்.

இந்நாட்டில் புராணங்களியற்றியவர்கள் தமிழ் தெய்வத் தன்மை உளதெனத் தடையின்றி ஆதரித்துப் போற்றியுள்ளனர். “தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண்ணுருவாக் கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித் தண்டமிழ்ச்சொலோ? மறுப்புலச் சொற்களோ? சாற்றீர்!”

என்று திருவிளையாடற் புராணமுடையார் கூறுகின்றார். மேலும் காஞ்சிப் புராணமுடையார்,

“வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி, அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைச் சங்கமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பின் அதன்பெருமை யாவரே கணித்தறிவார்!”