தமிழ் முழக்கம்
[241
அதனிடையே சிவபிரான் அந்நாட்டில் அரசராக விரும்பி வந்து ஆண்டு, அந்நாட்டு அரசிளங்குமரியாம் தடாதகைப் பிராட்டியாரையும் மணந்தனராம். தமிழராம் சம்பந்தர்க்கே சிவனார் ஞானப்பால் அருளினார். தமிழராம் சுந்தரர்க்கே அவர் தூதேகினார். முத்திதரும் பதிகளுள் இறக்க முத்தி தரும் பதியொன்றே வடநாட்டில் உள்ளது. போக, பிறக்க முத்தி, மிதிக்க முத்தி, காண முத்தி, நினைக்க முத்தி ஆகிய யாவும் தமிழ் நாட்டிலேயே உள்ளன. மணிவாசகரும் இதை எண்ணித்தான் போலும் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்றனர். ங்ஙனம் தமிழ்நாட்டுடனும், தமிழுடனும் இத்தனை நெருங்கிய தொடர் புடையவராகச் சைவர்கள் கூறும் சிவபிரானை முதலில் வடமொழிக்கு உரிமையாக்கவும், பின்னர் வட மொழிக்கே உரிமையாக்கவும் முயன்றவர் கைத்திறன், அம்மம்ம! கனவிலும் கருதற்பாலதன்றே! அத்தோடு நில்லாது, அன்னார் அச்சிவ பெருமான் கோவிலின் உள்ளும் புகுந்து அத் தமிழையும் அத்தமிழ் நால்வரையும் அவமதிப்பதைக் கண்டு சைவர் என்போர் ஏனோ வாளா கிடக்கின்றனர்.
இனித் திருமாலை எடுத்துக்கொள்வோம். அவர்தாம் ‘வடமறை ஓலமிட்டுப் பின்செலப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலாவரே. பரமசிவன் ஆரியர் தெய்வம் என்பது பொருந்தாதெனில், திருமாலை ஆரியர் தெய்வம் என்றல் எள்ளத்தனையும் பொருந்தாது. பிறப்பற்ற அவர் பிறக்க விரும்பியது அரசகுலத்தில்; பார்ப்பனர் குலத்தில் அன்று. ஒரு பிறப்பில் அவர் ஆயர் அல்லது இடையருடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். ஒருவேளை பிறந்ததே இடைக்குலந் தானோ என்னவோ? யார் கண்டார்கள்! அரசரும், இடையரும் வடநாட்டிலும்தமிழரினமே அன்றோ? இன்னும் ஐயமுண்டானால் அவர் நிறம் நோக்குக! ஆரியர் அவரை நெடியராக்கினும் கரியர் என்ற செய்தியை நீக்க முடியவில்லை. அத்தோடு, இன்னொரு சிறு நுட்பத்தை நோக்கினால் இத்தெய்வம் தமிழரிடையே தோற்றியது எனத் தெளிந்து கூறலாம். வடமொழியில் இவரைப் பெரும்பாலும் அமங்கலமாகக் 'கரியன்' என்று கூறினும், தமிழில் அவரை ‘மயங்கிய நீல நிறத்தவன்' என்ற பொருளில் “மால்” என வழங்குதல் கவனிக்கத்தக்கது. ‘கரியன்' என்று கூறுமிடத்தில்கூடத் தமிழில் கருமை ‘அருமை' எனப் பொருள்படுவதும் காண்க.