அவ்வழக்குத் தமிழ் பற்றியதே என்றும், வடமொழிக்கு முன்னமே தமிழ் தெய்விகமொழி எனக் கருதப்பட்டிருந்த தென்றும் காட்டுவோம். பின்னாளில், தமிழில் பற்றற்ற புல்லுருவிகள் தோன்றித் தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்ததுபோல, வட மொழியாளருடன் சேர்ந்ததனால்தான், தமிழ் தெய்வமொழி என்ற வழக்குக் குன்றி, வடமொழி அந்நிலையைக் கவரலாயிற்று, தமிழ்நாட்டில் கற்ற தமிழரும், கல்லாத பாமர மக்களிடமிருந்து பிரிந்து உயர்வடையும் நோக்கத்துடனேயே பிரித்தாளும் பார்ப்பனருடன் சேர்ந்து, தம்மையும் தம் இனத்தையும் தாமே தாழ்த்திக் கொண்டனர். இக்குணம் இன்றும் தமிழரிடை உண்டென்பதை, அவர்கள் கிறித்தவர்கள் தமக்குச் சூட்டிய ‘அஞ்ஞானிகள்’ என்ற பட்டத்தைத் தெரிந்தோ தெரியாமலோ பொறுத்துக் கொள்வதிலிருந்து காணலாம். நெடுநாள் பார்ப்பனர் சமயத்தை மேற்கொண்ட காரணத்தால்தான், தமிழர் இன்று 'தாம் மனிதர்' என்பதைக்கூட மறக்கும் தறுவாயி லிருக்கின்றனர்.
தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர் நால்வேதம் என்ற சொல்லுக்கு உரைவிரிக்குங்கால், "வேதங்கள் இருக்கு, எசுர், சாமம் அதர்வணம், என்று பாகுபாடு செய்யப்பட்டது பின்னாள்களில் வேதவியாசரால் என்றும், அதற்கு முன்னிருந்த தலவகாரம் முதலியவற்றையே முன்னூல்கள் குறிப்பிட்டன என்றும் குறிக்கிறார். இவை முன்னைய தமிழ் வேதங்களே என்றும், அவற்றுக் கிணையாக அவை இறந்துபட்டபின், வியாசர் வடமொழியில் அவற்றின் மொழிபெயர்ப்புகளையோ, கருத்துகளையோ வகைப்படுத்தி அமைத்தவையே, இன்றைய வேதங்கள் என்றும் தமிழறிஞர் பலர் கூறுகின்றனர். அதனை எதிர்த்து மறுப்பாருமுளர்.
எது எங்ஙனமாயினும், "நால்வேதம்" என்ற வழக்கு ஆரியரிடை இல்லை; தமிழரிடையேதான் உண்டு என்பது தெளிவு. இன்றும் வடநாட்டில் மூன்று வேதங்களே ஏற்கப்பட்டு, ‘திரிவேதி’ என ஊர்ப்பெயரும் ஆட்பெயரும் இருப்பதனால் இது பெறப்படும். தமிழ் நாட்டில் மட்டுமே தெள்ளத்தெளிய 'நான்மறை' என்ற வழக்கும், 'சதுர்வேதி மங்கலம்' என்ற ஊர்களும் காணப்படும். ஆகவே, ஆரிய வேதங்களுக்கு