இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளங்கலாம். யானைநூல் முதலில் தமிழரால் தமிழிலேயே (அல்லது தமிழின் திரிபாகிய மலையாளத்திலேயே) எழுதப்பட்டிருத்தல் கூடுமாயினும், பின்னால் எப்படி வடமொழி நூலாக்கப்பட்டதோ, அப்படியேதான் இவ்வேதாகமங்களும் என்பது தேற்றம். இராமாயண பாரதக் கதைகள் கூடத் தமிழ்க் கதைகளாக இருந்திருத்தல் வேண்டுமென மேலே குறிப்பிட்டோம். ஆகவே, இன்று வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை என்று எண்ணப்படும் நூல்களிற் பெரும்பாலன முதலில் தமிழினின்று வடமொழியில் ஆக்கப்பட்டுச் சிதைவுற்று, ஆரியச் சார்பு மிகுந்து, பின் மீண்டும் தமிழ்ப்படுத்தப்பட்டவையாம் என்க. எல்லாம் ‘ஆமில்டன் வாராவதி' என்ற ஆங்கிலச்சொல், சிதைந்து அம்பட்டன் வாராவதியாய், 'பார்பர்ஸ் பிரிட்ஜ்' (Barber's Bridge) ஆன கதைதான்.
இத்தனை வகையில் தமிழின் தெய்வத்தன்மை திறம்பட விளங்கவும், சமயவாதிகள் என்று இன்று தம்மைக் கூறிக் கொள்ளும் பலரும், வடமொழி தெய்வத்தன்மையுடையது என்றோ, வடமொழியே தெய்வத்தன்மையுடையது என்றோ சாதித்துத் தமிழை அந்நிலையிலிருந்து நீக்க - நீக்குவிக்க ஏன் அரும்பாடுபடுகின்றனர்? மேலும், தமிழை மேம்படுத்த வடவர் எவரும் முற்படாதிருக்க, வடமொழியை மட்டும் மேம்படுத்தத் தமிழ்நாட்டிற் பலர் முன்வருவானேன்?
முதலில், வடமொழி தெய்வ மொழியாயின் அஃது ஏன் இறந்துபட்டது என்பதற்கு இவர்கள் பதில் சொல்லட்டும்! இறைவற்கு விருப்பமான இருமொழிகளாகிய வடமொழி தென்மொழிகளுள் வடமொழி இறந்துபட்டதே, அஃது அந்த இறைவற்கே அத்தனை உகந்தது அன்று எனக் காட்ட வில்லையா?
செத்துப்போன ஒரு மொழியைத் ‘தெய்விகமொழி' என்று கூறி, ஓர் உயிருள்ள மொழியை - அத்தன்மைக்கு நிறைந்த தகுதியும் மேம்பாடும் உடையதாயிருந்தும் - மறுப்பது, அதிலும் தமிழ்நாட்டிலிருந்துகொண்டு, தாம் உழையாமல் பிறர் உழைப்பிலே கொழுக்க விரும்பும் ஒரு சமூகமும், அதன் வால்பிடிக்கும் சிலரும் மறுப்பது ஏன்?