பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. தமிழ் இலக்கியம் வாழ்க!

தமிழ் நம் அன்னை என்றும், நம் தெய்வம் என்றும் கூறினோம்.அன்னை என்ற வகையில் தமிழ்க்குச் செய்யும் பெரும் பணியாவது, அவ்வன்னையின் மக்களாகிய தமிழ் மக்கட் பணியும், அம்மக்களிடையே வேற்றுமை காட்டுபவரை ஒறுத்தலாகிய பணியுமே என்றுங் காட்டினோம். தெய்வம் என்ற வகையில் தமிழ்க்குச் செய்யும் பணி போற்றுதலாகும். தமிழ்த் தெய்வத்துக்குத் தமிழ் மக்கள் இதயமாம் சிற்றம்பலம் அமைத்து, அதில் அன்பெனும் மேடை ஏற்படுத்தி, அதன்மீது தமிழன்னையின் இலக்கியத் திருவுருவம் அமைத்து, அதனைப் போற்றவேண்டும். அங்ஙனம் போற்றித் 'தமிழிலக்கியம் வாழ்க!' என்ற மந்திரம் கூறி வழிபடுவோமாக.

உண்மைத் தமிழராவார் தம் உடைமைகளுள் எதனை இழப்பினும், தமிழினை இழக்க ஒருப்படார். ஏனெனில், அஃது அவர்கள் உயிர்க்கும் உயிர்போன்றது. உயிரினும் அரிய உயிர்ப் பண்பு அதுவே ஆகும். தமிழர்க்குத் தமிழ் எப்படியோ, அப்படியே தமிழ்க்கு உயிராய் விளங்குபவை தமிழ்க் கலைகளும், தமிழ் இலக்கியமும் ஆகும்.

ஒரு நாடு மிகவும் பெருமையடைவது அதன் கலைகளாலும் இலக்கியத்தாலுமேயாம். நாட்டின் பிற வெற்றிகள் எல்லாம் அன்றன்று பயன்தருவன, படைக்கலங்களாலும் பொருளாலும் பெறத்தக்கன. கலைகள், எல்லா வகையிலும் நிறைந்த வெற்றியும் வளமும் பெற்ற நல்வாழ்க்கையுடைய நாட்டில் மட்டும்தான் தழைத்தோங்கும். இன்று உலகை ஆட்டிவைக்கும் மேல் நாட்டாரைப் பாருங்கள்! உலகின் அரசியல், வாணிகம், எல்லாம் அவர்கள் கையில்! ஆற்றலும் செல்வமும் அவர்கள் காலடியில் கிடக்கின்றன! ஆயினும், என்ன? அவர்களிடம் கலைச்செல்வம் நம் அளவு உண்டா? இல்லை. ஏன்? அதற்கேற்ற வாழ்வுமுறை