பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

II-

அப்பாத்துரையம் 1

பூஞ்சோலைகளையும், பூப்பந்தர்கள், பூந்தடங்களையும் சேர்த்து ஒரு பெரிய பல்கலை விருந்து நிகழ்த்துகிறான். நாடகம் உட்படப் பிற கலைகளனைத்தும் இயற்கையின் ஒரு மூலையை வாழ்க்கையின் ஒரு கணப் போதை அழகின் ஒரு கூறை எடுத்துக்காட்டுவதுடன் நிற்க, இலக்கியக் கலைஞன், ஒரு மந்திர வாதியைப்போல, அணுவினும் சிறிய பொருள்முதல், அண்டத்தினும் பெரிய பொருள் வரை தன்னதாகக்கொண்டு, எல்லாவகைப் பட்ட மாயவித்தைகளும் செய்கின்றான்.எல்லாப் புலன்களுக்கும், மனத்துக்கும், மனத்திலுள்ள அறிவு, உணர்ச்சி, ஆற்றல் ஆகிய அனைத்துக்கும், அவன் உயிர் விருந்தளிக்கிறான். ஆகவேதான், அவன் கலையாகிய இலக்கியத்தை ‘அகலக் கலை' என்றனர் அறிஞர். அஃது அகலக் கலை மட்டுமன்று. அகலாக்கலை என்று கூறினாலும் கேடில்லை. ஏனெனில், அஃது உண்மையில் மனித வாழ்க்கையில் ஒன்றையோ பலவற்றையோ, அனைத்தையுமோ ஒரு பாடமாகக் காட்ட முடியும். அதன் அளவு விரிவு - கலைஞன் திறன் ஒன்றையே வரம்பாகக் கொண்டது. திறனோ, கிட்டத்தட்ட கடவுள் திறனுக்கே ஒப்பானது! அதனால்தான் முதல் தரக் கவிஞனைத் தமிழர், 'முனிவர்' என்றும், ‘பகவன்' என்றும் கூறினர்.

மொழிக்குக் கலையும், இலக்கியமும் உயிர் என்று மேலே கூறினோம். தமிழ்மொழி கலையிலும் இலக்கியத்திலும் ஊறியது. தமிழில் கலையும் இலக்கியமும் இல்லாவிட்டாற்கூட, நாம் கலைக்கும் இலக்கியத்துக்கும் அலந்தவர்களாய் விடமாட்டோம். ஏனெனில், தமிழ் மொழியே ஒரு கலை. தமிழ்ச் சொற்களே தனித்தனி இலக்கியங்கள்! தமிழ்மொழி இயற்கையின் முதற்சேய் எனும்படி இயற்கை ஒலிகள் இயற்கைப் பண்புடையவை என்று மேலே கூறினோம். இதிலிருந்து அஃது அப்படியே இயற்கையாய் எழுந்தது என்று எடுத்துக் கொள்ளப்படாது, இயற்கைக்கு மாறாகப் போகாது, பல்லாயிர ஆண்டுகளாக இயற்கையை ஒத்த முறைகளிலேயே பயன்படுத்தப்பட்டுவந்த மொழி என்றே தனைக் கூறுதல் வேண்டும். இயற்கை அழகுடையதாயினும், அதன் அழகைத் தனித்தெடுத்துக் காட்டும் கலையழகுபோல, இயற்கையின் அழகிய ஒலிகளைப் பிரித்தெடுத்துத் தமிழாக்கினர் தமிழ் மூதாதையர். அதனால்தான் தமிழில் மெய்கள் மொழி முதல் வாராமை, பொருந்தாமெய்கள் இடையில் மயங்காமை,