தமிழ் முழக்கம்
265
எதிர்ப்பின்றி, வடமொழி வேதம், மந்திரம் இவற்றைச் சைவ வைணவர் கோவிலில் ஓதும் உரிமையையும் பெற்றனர். பின், ‘ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கெடுத்தது போல்' தம் உடல் மினுக்காலும், ஒய்யார நாகரிகத்தாலும், பொதுமகள் போல் அனைவரையும் கவர்ச்சி செய்து நடந்து, 'தாசிமக்கள்' எனப் பொருள்கொள்ளும் (அவர்களுக்கே பொருந்தும்!) 'சூத்திரர்' என்ற பெயரைத் தமிழர்மீது சுமத்தி, அத்தமிழந் தணரையும் 'வேளாப் பார்ப்பனர்' என மாற்றி, நாளடைவில் தாழ்ந்த வகுப்பினர் என அவர்களே நம்பும்படி செய்து, இறுதியில் அவர்கள் சமயத்தையும் தம் பசப்புச் சமயத்துள் ஒரு பகுதியோ என எண்ணும்படி செய்துவிட்டனர். இதற்கெல்லாம் இடங் கொடாத தமிழ் நூல்களை ஆர்வத்துடன் கற்பதாகக் காட்டி அவற்றைக் கைப்பற்றி மறைவாகவும், பின் வெளிப்படை யாகவும் அவற்றைக் கடலில் எறிந்தும், ஆற்றில் எறிந்தும் வந்தனர். அக்கடலில் எறிந்த செய்தியையே அவர்கள் மக்களிடைக் கடல்கோள் செய்தியுடன் தம் குற்றம் வெளிப்படாவாறு குழப்பிப் பரப்பினர். ஆற்றிலெறிவதையே காவிரிப்புராணமாக விரித்து, மீண்டும் மீண்டும் தமிழ் நூல்களை அழித்து வந்தனர் அழிக்கின்றனர் - அழித்தும் வருகின்றனர். இஃது அன்று மட்டுமன்று, இன்றும் அண்மையிற் காலஞ்சென்ற அறிஞரின் நூல்களைக்கூடச் சிலர் கூட்டியும் திரித்தும் எழுதுகின்றனர் என்று கூறப்படுகிறது. இங்ஙனம் பல்லாயிரம் ஆண்டுகளாக அழித்தும் அழியாது மீந்தவையே - தமிழ் மீது தமிழ்நாட்டுத் தமிழர் கொண்ட விடாப்பிடி ஆர்வத்துக்கு ஒரு சிறு குறியீடாய் இன்று ‘தமிழிலக்கியம்' என்னும் பேர்கொண்டு நிலவுகின்றது.
போனது போக, இம் மீந்த இலக்கியத்தை நோக்கினாலும், தமிழ் இலக்கியத்தின் விரிவும் கொள்கையும் வியப்புக்கிட மானதேயாகும். இன்று உலகிலுள்ள சமயங்களுள் கிட்டத்தட்ட எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளன. படிப்படியாக அவை அனைத்துக்கும் தமிழ் இலக்கியம் இடந் தந்துள்ளது. இராமனழகை வருணிக்கும் கம்பர், “தோள் கண்டார் தோளே கண்டார்” எனக் கூறுவதே போலத் தமிழிலக்கியமும் ஒவ்வொரு சமயத்தார்க்கும் ஒரு பகுதி காட்டித்தான் எல்லாரது பகுதியையும் ஒருங்கு உடன் கொண்டதாயுள்ளது. இவற்றுள் மிகப் பிந்தித் தமிழ் நாட்டில் நுழைந்த இசுலாமிய கிறித்தவ சமயங்களின்