ஊழல்கள் - மூடப் பழக்க வழக்கங்கள் வளர்க்கப்படுகின்றன. பணக்காரத் தமிழர் ஏழைகளிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அவர்கள் பணமெல்லாம் ஏழைத் தமிழர்களுக்கும், அப் பணக்காரத் தமிழர்களுக்கும் எட்டாது, கோவிலில் புதைக்கப்பட்டுத் தமிழ்ப் பகைவரிடையே சோம்பேறிகளையும், சமூகப் புல்லுருவிகளையும் வளர்க்க வழங்கப்படுகிறது.
இனிச் சங்க இலக்கியமோவெனில் மொழிபெயர்ப்பு
அன்று. கருத்து, பண்பு ஆகிய எதிலும் பிறமொழிச் சார்பு பகைச்சார்பு உடையது அன்று. அதில் கலந்த மிகச்சில வடசொற்களும், கருத்துகளும் நட்பு முறையில் எடுக்கப் பட்டுள்ளனவேயன்றி, அடிமை மனப்பான்மையுடையவையன்று. இவ்விலக்கியத்தை வடமொழி இலக்கியத்துடன் ஒப்பிட்டால், வடமொழியின் எந்த இலக்கியத்திலும் காணப்படாத உயர்பண்புகள் இதில் காணப்படும்.
ஆனால், எந் நோக்கத்துடன் எதிர்ப்பினும், சங்க
இலக்கியத்தை எதிர்ப்பவர் கூற்றுக்கு இடமில்லாமல் இல்லை. கம்பர் காலத்தினும் சங்ககால இலக்கியத்தில் உயிர்ப்பும், துடிப்பும், வண்மையும் குறைவே. இதற்குக் காரணம் அரசியல் சமூக வாழ்வில் கம்பர் காலம் களிப்பும் வெற்றியும் மிக்க காலம். அப்போது தமிழரின் உணர்ச்சி ததும்பி நின்றது. சமய வாழ்விலும் அப்படியே! சங்க காலம் அறிவு நிறைவு பெற்ற காலமாயினும், தமிழர் தனித்தோங்கி நின்ற காலமாயினும், உணர்ச்சி குன்றிய காலம், அரசியலில் சேர, சோழ, பாண்டியர் வலிகுன்றிக் குறுநில மன்னர் ஆட்சி மிகுதியடைந்த காலம். கோசர், களப்பிரர் முதலிய பிறநாட்டு வீரரும் உட்புகுந்து கொள்ளையிட்ட காலம். தமிழர் அப்போது வீரராயிருந்தனர். ஆயின், சிறு அளவிலேயே. செங்குட்டுவன், கரிகாலன் முதலியோர் வரவர அருகினர். சமயங்களில் ஆரியமும், புத்தமும், சமணமும் வந்து விரவின. தமிழர் அனைவர்க்கும் இடந்தந்தனர். பின்னர் அதனால் குழப்பமெய்தியும் நின்றனர். இந்நிலையில் பேரிலக்கிய நூல்கள் ஏழாது, தனிப்பாடல்களும் குறைகளுமே மிகுந்தன. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டும் மட்டுமே கதை தழுவிய காவியங்கள். இக்காலம் உண்மையில் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிராயர் காலம் போன்றது ஆகும். -