கடைச்சங்க காலமோ அதன் முந்திய ஓர் ஆயுட்காலத்தின் முதுமை என மேற்கூறினோம். ஆகவே, இன்றைய தமிழிலக்கியத்தில் ஒரு பண்டைய வாழ்வின் முதுமையும், பின் ஒரு முழுவாழ்வும், அதன்பின் ஒரு புதுவாழ்வின் தொடக்கமும் காணப்படு கிறது. ஆகவே, நம் கண்முன் மூன்று வாழ்வுகள் உள்ளன. வடமொழியின் வாழ்வு ஒன்று; ஆங்கிலத்தின், தமிழின் வாழ்வு மூன்று. அதுமட்டுமன்று; ஆயுள் நீட்டிப்பை எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்தின் ஓர் ஆயுள் ஆண்டு இருநூறு வடமொழியின் ஓர் ஆயுள் ஆண்டு ஆயிரம். தமிழின் ஓர் ஆயுள் ஆண்டு ஆயிரத்து முந்நூறு. (சிந்தாமணியின் காலம் கி.பி.500; கவிராயர் காலம் 1800)
பிற இலக்கியத்தின் தொடக்கக்கால மொழி வளர்ச்சி
குறைவு. தமிழின் தொடக்கக்காலம் ஒரு பெருவாழ்வின் ஓய்வு உறக்கமேயன்றி வேறன்று பிறநாட்டிலக்கியம் சிறு செடிகளின் விரைந்த வளர்ச்சி, தமிழிலக்கியம் நெடுநாள் வளர்ந்து வெட்டப்பட்டமரத்தின் ஆழ்ந்த வேர்கள் எழுப்பிய உள்வளர்ச்சி போன்ற வன்மையுடையதாகும்.
ஆகவே, பழந்தமிழ் இலக்கியங்கள் சில பல அழிந்ததற்காக
அழவேண்டியதில்லை. ஏனெனில், ஒருபுறம் இலக்கியத்தின், கலையின், பிழிவே தமிழ்மொழி. தமிழர் வாழ்வு தமிழருளத்திற் கரந்த தமிழ்ப்பண்பு. இன்னொன்று அவ்விலக்கியம் நூலில் அடங்கி,நூலெறிந்தால் - நூலெறியப்பட்டால் அழிந்தொழிவ தன்று. அது தமிழின் தமிழரின் உளமாகிய அடிவேரில் தளிர்ப்பது. தளிர்கள் மலர்கள் - இலைகள் - கொப்புகள்- அடிமரம் - வெட்டப்பட்டன.ஆயின் என்ன? அதன் உயரிய உட்பண்பே வேராய்த் தமிழர் இதயத்தில், வாழ்வில் பின்னி ஆரியர் கைக்கும் சூழ்ச்சிக்கும் அப்பாற்பட்டதாகக் கிடக்கிறது.
மலையாளத்திலிருந்த ஏலக்கொடி பற்றிய அழகிய கதை
ஒன்றுண்டு. ஏலக்காயைப் பாண்டி நாட்டார்கொண்டேகினராம். அரசரிடம் முறையீடு சென்றது. தருமனை ஒத்த அரசர்'சரி! நம் நாடு வளமுடையது. போகட்டும்', என்றார். 'ஐயனே ஏலக்காய் மட்டுமன்று ஏலக்கொடிகூடக் கொண்டேகுகின்றனர் பாண்டியமக்கள்' என்றனராம், கலவரப்பட்ட குடிகள், அறிவு சான்ற அரசன் புன்முறுவலுடன், 'கொடிபோனாலென்ன? நம்