நாட்டு மழையுமா போகும்? ஆதலிற் கவலை வேண்டா என்றனராம். அதுபோல் தமிழ்க் கலைகள், இலக்கியங்கள் இறந்தனவே எனக் கவலை வேண்டா. இன்றைய இலக்கியம் எறியப்பட்டால்கூடக் கவலை வேண்டா என்று நான் நம் தமிழ் நாட்டினர்க்குக் கூறுவேன். இலக்கியத்தின் இலக்கியம் - இலக்கிய ஊற்று - கலையின் உயிராகிய தமிழன் - உண்மைத் தமிழன் உண்மைத் தமிழ்ப்பண்பு குன்றாத உயர்தமிழன் ஒருவன் உள்ளவரை அவனை அழித்தொழிக்காதவரை, தமிழ், தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம் அழியாது; அதனை அழிக்கவும் முடியாது.ஆதலின், அப்பண்பை வளர்ப்போம். அப்பண்புடைய இலக்கியம் அதனால் வளரும். இன்றைய இலக்கியத்தில் கூடியவரை அதற்கு முயல்வோம்.
தமிழர் வாழ்விலேயே இலக்கியப் பண்பு ஊறியிருக்கிற
தென்று கூறி னோம். அவ் வாழ்வோடு தொடர்புள்ளவரை இன்றைய தமிழ் இலக்கியமும் தமிழ்ப் பண்பினின்று நெடுந்தொலைவு அகன்றுவிடாது. உண்மையில் எல்லா நாட்டையும்விடத் தமிழ்நாட்டில் இலக்கியமும், கலையும் சமயமும் வாழ்க்கையோடு இணை பிரியாத தொடர்புடையன. கலைகளும், இலக்கியமும், இசையும், நடனமும் பெண்கள் விளையாட்டுடனும், ஆடவர் களியாட்டத்துடனும் கூடியிருப்ப துடன் மட்டுமல்ல,சிறுமியர் ஆட்டமான அம்மானை, கழங்கு, பந்து, பொழுது போக்குக்கான ஊசல், வாழ்க்கைச் செய்திகளான மார்கழி நீராடல், தொழிலாளர் சுண்ணமிடித்தல் இவை பாட்டுடனும், செயலுடனும் இசைகின்றன. ஆண்களிடமும் போர் முதலிய பெரிய செய்திகளுமேயன்றி, ஏற்றமிறைத்தல், படகு, கப்பல் ஓட்டுதல், பள்ளர் வாழ்க்கை, குறவர் வாழ்க்கை முதலியவற்றை ஒட்டி ஏற்றப்பாட்டு, வஞ்சிப்பாட்டு,பள்ளு, குறவஞ்சி ஆகிய வகைகள் உள்ளன. இன்னும் சிந்து, நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, கிளிக்கண்ணி, பாம்பாட்டிச் சித்தர் பாடல் முதலிய பலவகைகளும், தமிழரின் வாழ்க்கையிலேயே கவிதை பின்னிப் பிணைந்து கிடப்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இவை இலக்கியத்தில் மதிப்புப் பெறாமல் இல்லை.
பெற்றது பின்னாளில் மட்டுமன்று; மாணிக்கவாசகர், மூவர் காலமுதல் தொடங்கிப் பாரதியார், பாரதிதாசன் காலம் வரை,