பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய மக்கள் வாழ்க்கையை எளிய இனிய பாவில்-இசைகலந்த பாட்டில் அமைக்கும் பழக்கமுளது. ஒவ்வொரு துறையை மட்டிலும் எடுத்தாற்கூட மாணிக்கவாசகர், மூவர், ஆழ்வார்கள், பட்டினத்தார், தாயுமானவர், தத்துவராயர், பத்திரகிரியார், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் ஆகிய எத்தனை புலவர்கள் என்று நோக்குக. அவருள் அரசியல், சமூகச் சீர்திருத்தம் ஆகிய புதுக் கருத்துகளைப் பாடியவர்கள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர்.

   இதற்கடுத்தபடியான வாழ்க்கைத் தொடர்புள்ள

இலக்கியம், இசை, நாடக இலக்கியங்கள், இவற்றுள் சிலப்பதிகாரம் தலைமையானது. அதன்பின் தேவாரமும் நாலாயிரப் பிரபந்தமும் மட்டுமே இத்துறை சார்ந்தன. அண்மையில் தமிழிசை இயக்கம் ஏற்படுவதற்கு முன்னர்க் கீர்த்தனங்கள் இராமலிங்க அடிகளாலும், அருணாசலக் கவிராயராலும், முத்துத்தாண்டவராலும் பாடப் பெற்றன. இசைப் புலவர். இலக்குமணப் பிள்ளை அவர்களும் இதனை அறிவியல் முறைப்படி பாடியவர். தமிழிசை இயக்கம் ஏற்பட்டபின் அதனைப் பயன்படுத்திச் சுத்தானந்தர் ஓரளவும், பாரதிதாசன் நிறைவு படவும் பல பண்களிலும் வாழ்க்கையை ஒட்டிய-உயர் கருத்துப்பட்ட-தமிழ்ப்பண்பு மிக்க பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்-பாடிவருகின்றனர்.

      இசையினின்று விலகிய-மக்கள் வாழ்க்கையினின்று

விலகிய - இயற்கையினின்று விலகிய -இலக்கியமே கம்பர் கால இலக்கியமாம். இவை படித்தவர் இலக்கியம். அதாவது செயற்கை இலக்கியம் என்னலாம். இச்செயற்கைக் கற்பனை முறைகளுக்குத் தமிழில் ஒப்பற்ற தலைவர் கம்பர். வடமொழியில் ஒப்பற்றவர் தண்டியும், சிரீ ஹர்ஷனும் ஆவர். இதனைத் தமிழில் முதன்முதலில் தோற்றுவித்தவர் சிந்தாமணி ஆசிரியர். இதேமுறையில் கடைசியாக வந்தவர் நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியனும், பிரபுலிங்கலீலை பாடிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளும் ஆவர். இச்செயற்கைக் கற்பனைகளும், 'காப்பியடித்துக் காப்பியடித்து' உயிரற்றுப்போன காலத்தில்தான், புராணங்களும் தலபுராணங்களும் கணக்கின்றி எழுந்தன.