இக் கற்பனைக் காவியங்களிலிருந்து கிளைத்து மக்கள் செவிக்குச் சற்றே இசையுணர்வையும் எழுப்பி, இரண்டாலும் ஓசைச் சுவைமிக்க காவியங்களே சந்தக் கவிதைகளாம். இதனை முதன்முதல் தொட்டவர் கம்பரேயாவார். அதன்பின் சயங்கொண்டார், வில்லிபுத்தூரார் முதலியவர் சந்தச் சுவையைப் பெருக்கினர். இத்துறையில் கடைசியானதும் அனைவரினும் ஒருபடி முற்போந்ததும் அருணகிரி நாதரின் திருப்புகழாகும். இதில் கம்பரது கற்பனை மிகவும் குறைவுற்றுச் சந்தம் நிறைவுபெற்று விளங்கும். பொருள் நயம் இனிமை இவற்றினும் பகட்டான நடையையே அவர் விரும்பியதால், பொருத்தமற்ற இடங்களிலும் வட சொற்களை - பிறர் பாட்டில் வழங்காத வழங்கத் தயங்கும் வடசொற்களைக்கூடத் தாராளமாக வழங்குகிறார். -
கற்பனை இலக்கியத்தின் நடையை மிகுத்துச் சந்தக் கவிகள்
உண்டாயின. அவற்றின் அமைப்பைத் துறையாக வகுத்துத் துறைநூல்கள் அல்லது பிரபந்தங்கள் எழுந்தன. இவற்றுள் கவிதைச்சுவை சொட்டும் திருக்கோவையார் காலத்தான் முந்தியது.ஆனால், பெரும்பாலும் பிள்ளைத் தமிழ், கலம்பகம், உலா என்ற துறைகள் கம்பர் காலத்துக்குப் பிற்பட்டவையே. கற்பனை இலக்கியத்தில் கம்பர் கவிச்சக்ரவர்த்தியாயிருப்பது போல், இத்துறையில் ஒட்டக் கூத்தர் கவிச்சக்கரவர்த்தியாவார். அவரது மூவருலாவுக்கு இன்னும் ஒப்புக் காண அரிது ஆகும். கம்பர் காலத்துக்கு முன்னமேயே எளியநடையில் பிரபந்தங்கள் எழுதியவர் பட்டினத்தார் ஆவார். இத்துறையில் இன்னொரு சிறந்த பழைய நூல் செயங்கொண்டார் செய்த கலிங்கத்துப் பரணியாகும். இப்புலவரும் ஒட்டக்கூத்தரையும் கம்பரையும் ஒப்பக் கவிச்சக்கரவர்த்தி எனக் கூறப்படுவர். தனித் தமிழிலேயே இவர் சந்தங்கள் பாடியவர். பிற்காலத்தில் இத்துறைகளில் குமரகுருபரர், சிவப்பிரகாசர், மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆகியோர் சிறந்தவர்.
ஆகத் தமிழிலக்கியம் ஆகாயம்போல் பரந்தது. இன்று
கிட்டிய தமிழிலக்கியம் கூடக் கடல்போல் கரையற்றுப் பல துறைகளாய்க் கிடக்கின்றது. ஆயினும், இன்றைய நிலையில் சில துறைகளிற் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. வடமொழியில்