பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறக்குமதியால் வளராது, உட்பண்பு விரிப்பினாலேயே வளரும் என்கின்றனர். ஆங்கிலம் இன்று பிறமொழிச் சொல் நூற்றுக்கு அறுபதுக்குமேல் உடையது. ஆனால், இந்த நூற்றுக்கு அறுபதும் செங்கல்கள் போன்றவையே என்றும், கட்டடத்துக்கு உறுதியும் கவர்ச்சியும் கொடுக்கும் சுண்ணமும் நீரும், தனி ஆங்கிலமே என்றும் அறிஞர் கூறுவர். அத்தோடு பிறமொழிச் சொல் ஒவ்வொன்றும் தாய்மொழிச் சொல்லை ஓட்டிவிடும் என்பதும், இன்று நடைமுறையில் காணலாம். செல்லாக் காசு செல்லுங் காசை ஒட்டிவருவது போலக் கனவு, உறக்கம் முதலிய நல்ல தமிழ்ச் சொற்களைச் சொப்பனம், நித்திரை ஒழித்து வருதல் காண்க. இப்படி ஒழிந்த சொற்கள் பல. ஒழிந்துவருபவை வேறு. தமிழ்ப் புலவர் முயற்சியால் சில தனித்தமிழ் இலக்கியச் சொற்கள் அண்மையில் வழக்காற்றில் வந்துள்ளன. அங்ஙனம் இலக்கியச் சொற்கள் வழக்கில் வரமாட்டா என்பவர்க்கு 'உறவற்ற செத்த மொழிச் சொற்கள் தமிழ் வழக்கில் கொண்டுவரப்பட்டு வழங்கக்கூடுமானால், தமிழ்க்குருதி ஓடும் உயிர்ப்புள்ள சொற்கள் ஏன் வழக்கில் வாரா? என்று வினவலாம்.

             எனவே, தமிழ்நலம் பேணுவோர்க்கு உரைகல், அவர்

தமிழ்நலம் பேணி, தமிழின் இலக்கியமும் தமிழ்ப் பண்பும் பேணி, அனைத்தும் தனித்தமிழாய் - சொற்கலப்பு ஏற்பட்டால்கூட அதனால் தமிழின் தலைமை கெடாதும், தமிழர் தலைமை கெடாதும் பேணும் தமிழராய்ச் செயலாற்றுவதேயாகும். அங்ஙனம் செயலாற்றத் தமிழர் தம் பன்னூறாயிரக்கணக்கான இணைக் கரங்களையும் ஒன்றாக்கிக் கொண்டு உழைப்பார்களாக!

           வாழ்க தமிழ்! வாழ்க தமிழிலக்கியம்!
                  "திருவார் குறள்தானும் தெய்வச் சிலம்பும்
                    உருவாரக் கொண்டேன் உளம்."