பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்களால் உருகியது என்று கூறப்படுகின்றது. அப்படியிருக்க, அதனை மனித உலகளவில் குறுக்கி, அதனினும் ஒரு மொழி - ஒரு நாட்டினுடன், தொடர்புபடுத்தித் தமிழிசை எனக் கூறுவானேன் என்ற கேள்வி எழலாம்

      அறிவியல் அல்லது விஞ்ஞானத்தில் பிரஞ்சு நாட்டு

அறிவியல், ஆங்கில அறிவியல் என இல்லையே? அதுபோல் தானே இசையும் என்று நீங்கள் கேட்கக் கூடும்.

     ஆனால், இக்கேள்வி இசையின் ஒரு துறையைப் பற்றிய

மட்டில்தான் உண்மை. இசை ஓர் அறிவியல் என்ற வகையில் அஃது எல்லா நாட்டுக்கும் பொது. ஆனால், இசை அறிவியல் மட்டும் அன்று, அஃது ஒர் உயர் கலையும்கூட, முன் குறிப்பிட்டபடி உயர்ந்த கலை- கவின்கலை; உயிருள்ள செயலுள்ள கவின் கலையாகும். கலை என்ற வகையில் அது நாப்பழக்கம், செவிப்பழக்கம். உணர்ச்சிப் பழக்கம் உடையது. நாவும் செவியும், மொழியினுடன் சேர்ந்தன உணர்ச்சியோ, மொழியிலும் தாய்மொழியுடன் இணைந்தது. உணர்ச்சி ஆழ்ந்துவிடின் - அறிவு தானும் ஆழ்ந்து விடின்-இவ்விரண்டும் வாழ்க்கையுடன் உறவுடையதானால், அது மொழியுடன், அதுவும் தாய்மொழியுடன் தாய்மொழி இலக்கியத்துடன் தொடர்புபடுதல்வேண்டும். தாய்மொழியுடனும் தாய்மொழி இலக்கியத்துடனும் கூடாத இசை உயிரற்ற ஒரு வாய்ப்பாட்டாக லாம். ஆனால், அஃது உயிருள்ள ஒரு கலையாகமாட்டாது.

      எனவே, இசை ஒருகலை; மொழியுடன், இலக்கியத்துடன்

தொடர்புடைய ஒரு கலை. அதன் அறிவியல் பகுதி எல்லா மொழிக்கும் பொது. கலைப் பகுதி-உணர்ச்சி தரும் பகுதி- இலக்கியப் பகுதி - தமிழரைப் பற்றிய மட்டில் தாய்மொழி யிலேயே-தமிழர் தாய்மொழியாகிய தமிழிலேயே இருத்தல் வேண்டும், இருத்தல் இன்றியமையாமையாகும். அப்படியிருக்க, அத் தமிழில் இசை இருக்க முடியுமா? என்றும், அத் தமிழ்க்கும் இசைக்கும் தொடர்புதான் ஏது? என்றும், தமிழிசை தெலுங்கிலேன் இருக்கப்படாது? என்றும், கேள்விகள் கேட்பது அறியாமை. இவ்விந்தை தமிழ்நாடு ஒன்றிலன்றி உலகில் வேறு எந்நாட்டிலும் இருக்காது.