பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தாலும் - மண்வெட்டும்போதும் நீரிறைக்கும்போதும், பாதையிற் கல்போடும் போதும்கூட-பாடலும் ஆடலும் கலந்து தொழிலாற்றுவதிலிருந்தும் - சமயச் சார்பில் பக்திச் சுவை சொட்டும் பாடல்களின் மிகுதியிலிருந்தும் அறியலாம். இவ்விசை வாழ்வினின்று உயர்குலத்தார், ஆரியத் தாக்கினாலும், சமண பௌத்த சமயத் தாக்கினாலும் படிப்படியாக விலகினர். சங்க காலத்தும் 'பாணர்', 'விறலியர்' இவ்விசைப் பழக்கத்தை விடாது காத்துவந்தனர். தமிழரசர், குறுநில மன்னர் படிப்படியாக ஆரிய சமண வலைப்பட்டபின், இவர்கள் பிழைப்பும் அகன்றது. இவ் வகுப்பினருள் அழியாது எஞ்சி நின்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரால்தாம் தேவாரப் பண்கள் மீந்து நின்றன. இவர் குடிப்பிறந்த ஓர் அம்மையாரே அவற்றுக்குப் பண்வகுத்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழிசையின் கடைசிப் பூண்டு இவ்வம்மையே போலும்! தேவாரத்துக்குப் பண் வகுத்த இவர்போல் திருவாசகம் முதலிய நூல்களுக்கு வகுக்க யாரும் முயலவில்லை. இங்ஙனம்,ஆதரவின்மையாகிய மணலில் தமிழிசையாகிய வையை சென்று சுவறிற்று. ஆனால், மேல்நிலத்திற் சுவறினும், வையை அடிநிலத்தில் தருவது போலவே, தமிழிசையும் மேலீடாகப் பார்ப்பவர்க்குச் சுவறியது போலத் தோன்றினும், உண்மையில் இன்னொரு வகையில் -எதிர்பாராத இன்னொரு வகையில் - அல்லது இன்னும் பல வகைகளில், ஊற்றெடுத்து ஒழுகத் தொடங்கிற்று. இத்தகைய ஊற்றுகளுள் ஒன்றே மக்கள் வாழ்வில் ஊறி ஆங்காங்கே பள்ளு, குறவஞ்சி, கிளிக்கண்ணி, நிலாவணி ஆகிய பொதுமக்கட் பாட்டு வகையாகிப் பின் புலவர்களால் எடுத்துக் கையாளப்பட்டது. இன்னொன்று இதனினும் எதிர்பாராதது. இவ்வூற்றுகளினின்று பொறிகளால் நீரிறைக்கப் பெற்று, வானளாவ உயர்ந்த தொட்டிகளில் நிரப்பி, அருவியாகவும் மேலூற் றாகவும் பாய்ந்தெழுவதுபோல், தமிழிசை பிறபுல மன்னர்க்குப் பொழுது போக்குக்காக வழங்கி, அம் மன்னரைச் சார்ந்தொழுகியவர் கைபட்டுத் தானும் அவர்களைச் சார்ந்ததொழுகிப் பிற புலப் போர்வை போர்த்து வாழத் தொடங்கிற்று.