பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கில் இயற்றியதனால்தான் அவரை இசை அரசராக உயர்த்தினர் அத்தெலுங்கு அரசர்கள். தியாகர் காலத்திலேயே அவரினும் உயரிய கலைஞர் இருந்திருந் தாலும்கூட, அவர் தமிழிலெழுதியிருந்தால் உயர்வு பெற்றிருக்க மாட்டார். ஷேக்ஸ்பியர்போல், பெர்னாட்ஷாபோல் நம் நாட்டுக்குக் கிடைத்த பாரதிதாசனும் உரிய உயர்வடையாத காலை, ஆங்கிலத்தில் கடுகு வறுக்கும் சொத்தைகள் கூட, ஐயாயிரம்ஆறாயிரம் எண்ணிக்கொட்டி இறுமாப்படையவில்லையா? அதுபோலவே இதுவும் என்க.

இத்தனை தொலை தமிழிசையைத் தெலுங்குக்கு உரியதாக்கப் பார்த்தும், இன்றளவும் அது வெற்றியடைய வில்லையே! அப்படியாயின் இன்று தமிழரிசை தெலுங்கிசைஎனப்படுவதேன்? தெலுங்குக்குரிமை என வாதாடப்படுவதேன்? இதுவும், தமிழ்நாட்டிலுள்ள கலிகாலக் கூத்திலொன்று.தமிழ்நாட்டிசை தெலுங்கிசை என்று தெலுங்கர் கூறிக்கொள்ள விரும்புவது இயற்கையே! அது தமிழர்க்கும்கூடப் பெருமையும் மகிழ்ச்சியும் தரத்தக்கதுதான். தெலுங்கர்தாம் நம் உறவினராயிற்றே? பின் ஏன் இப் பூசல்? என்றால், தெலுங்கர் அல்லர் இவ்விசையைத் தமக்குரிமையாக்கப் பாடுபடுபவர்! தமிழ் நாட்டில் உள்ள நம் பழைய புல்லுருவிக் கூட்டத்தார்தாம், அதை வேறெதாவது நாட்டுக்கு ஜெருமனிக்கும் துருக்கிக்கும் சொந்தமாக்க முடியாவிட்டால் வடநாட்டுக்காவது - அதுவும் முடியாவிட்டால் தெலுங்குக்காவது உரிமையாக்கித் தொலைத்து விடலாம் என்று பார்க்கின்றார்கள். அவர்கள் எண்ணமனைத்தும் பற்றுத லனைத்தும், தெலுங்குக்கு ஆதரவு, இந்திக்கு ஆதரவு,வடமொழி அல்லது வேறெம்மொழிக்காவது ஆதரவு என்றல்ல.எப்படியாவது அது தமிழர்க்குப் புறம்பாய் - தமிழர்க்கு எட்டாததாய்ப் போய்த் தமது தரகுக்கு உடந்தையானதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான். ஆதலால், தெலுங்கு தமிழ் என்ற இப்போட்டி உண்மையில் தெலுங்குக்கும் அல்லது வேறெந்த மொழிக்கும், தமிழ்க்கும் உள்ள போட்டி அன்று;தெலுங்கு அல்லது தமிழ்க்குப் போட்டியாய் வர இணங்கும் வேறெந்த மொழியின் பெயரையாவது முகமூடியாய் அணிந்துகொண்டு, சிலர் சுயநலத்துக்காகத் தமிழை, தமிழர் தமிழைத் தாக்கும் தாக்கேயன்றி, இது வேறெதுவுமே அன்று.