ஆகவே, மலையாளத்து மன்னர் ஏலக்கொடி வகையிற் கூறியதுபோல், கருநாடக இசை எப்பெயர் கொண்டு எங்கு நிலவினும், எம்மொழிப் போர்வை போர்ப்பினும் அது தமிழிசையாகவே நிலவும் என்பது உறுதி. ஆனால், ஒரே ஒரு குறைமட்டும்; அது தமிழில் நிகழாது வேறெம்மொழியில் நிகழ்ந்தாலும், அஃது உண்மையில் தமிழிசையோ தமிழிசையின் கிளையோகூட ஆகாமல், தமிழிசையின் நிழல் - அதுவுங்கூட வட்டக் கண்ணாடியில் தோன்றும் விகாரமான நிழலாகவே விளங்கும் என்று கூறுதல் வேண்டும்.
இன்று,கருநாடக இசை தென்னை மரத்திற் பூத்த பனம்பூ மாதிரி, (அது பூக்குமா என்பது கேள்வியன்று; தாள் பூவாயிருக்கலாமல்லவா?) தமிழிசையும் ஆகாமல் தெலுங்கிசையும் ஆகாமல் இருக்கின்றது.இந்நிலையில் அதனை 'ஒரு கலை' என்று கூறுவதே தவறாகும். தமிழ்ப் பாட்டுக்குப் பதில் இலக்கணப் புலவர்களது தேமாங்காய் புளிமாங்காய் வாய்பாடுகளைக் கோத்துப் பாட்டியற்றினால், எப்படி அது பாட்டின் ஒலிப்பு உடைய தாயினும் பாட்டாகமாட்டாதோ அதுபோலவேதான் கருநாடக இசையும் தமிழர் வாய்ப்பாட்டிசையாகுமே யன்றித் தெலுங் கிசையோ, தமிழிசையோ இரண்டும் ஆகாது. ஏனெனில், அது தெலுங்கு மொழியின் சந்தங்களும் பாவங்களும் அற்றது. தெலுங்கர் இலக்கியம் என்று போற்றக்கூடும் தன்மையுமற்று விளங்குவது.'
கருநாடக இசை தமிழிசையின் ஒருகிளையே, அல்லது நிழலே, அல்லது திரிபே என்று கூறினோம். அது தெலுங்கு நாட்டில் என்றும் காணப்படாதது மட்டுமன்று; தெலுங்கு மொழியின் பெயர் வரலாற்றில் கேட்கப்படுவதற்கு முன்னிருந்தே தமிழ்நாட்டில் அதன் அங்குரங்களும், அதன் முழு இசையியக்கமும் காணப்படுகின்றன. நாம் மேலே கூறியதுபோல்,தேவாரங்களுக்குப் பண் வகுத்துக் கோவில்களில் பாடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது சோழர் காலத்தில் ஆகும். சோழருள் ஒருவன் இசை பயில்வதற்கான குறியீடுகளை - சுரங்களை - வகுத்து ஒழுங்குபடுத்தினான் என்று கலிங்கத்துப் பரணியில் கூறப்படுகிறது. இதற்கு நெடுநாள் முன்னர் முதலிரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவ அரசன் ஒருவனுடைய கல்வெட்டில்கூட இதே