புன்முறுவல், இழிப்பு ஆகிய இத்தனைக்கும் விடாது இன்றும் வில்லுப்பாட்டு, கரகம், காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, நிலாவணி, குறவஞ்சி, பள்ளு,ஏற்றம் முதலிய பாட்டுகளும், இவற்றை ஒத்த மலையாளத்திலுள்ள தமிழ் விருத்தங்களான கிளிப்பாட்டு, வஞ்சி, துள்ளல் முதலியனவும் அழியாமை காண்க. இவற்றின் உயிரை, இவற்றிலுள்ள மக்கள் வாழ்க்கைத் துடிப்பை வியந்தே, இன்றைய புதிய நாடகக் கழகங்களும், பேசும்படக் கழகங்களும் அவற்றை ஆங்காங்கே பயன்படுத்திப் பொதுமக்கள் ஊக்கத்தைத் தூண்டிப் பாராட்டையும் எளிதிற் பெறுகின்றன. மக்கள் விரும்பிய இப்பாட்டுகளைக் கலைஞர் மேம்படுத்திக் கலையை வாழ்வுடன் தொடர்பு படுத்தாது, அதனை இழிவென விளம்பரப்படுத்திக் கலையினின்றும் ஒதுக்கி வைக்கின்றார்கள். ஏனெனில், நம் நாட்டில் இன்று கலைவேறு, கல்வி வேறு என்று இரண்டாகப் பிரிந்தியல்கிறது. இசைக்கலை என்ற பெயரால் பணம் ஈட்டுபவர் அதனை அறிவியலாகவோ, கலையாகவோ எண்ணாமல், தொழிலாக மட்டுமே எண்ணி, அதற்கான தொழில்திறம், தொழில் பசப்புடன் நின்று விடுகின்றனர். அதனைக் கல்வியுடனும், மொழியுடனும், கவிதையுடனும் தொடர்புபடுத்துவது இல்லை. உண்மைக் கலையின் உயிரான மக்கள் வாழ்வுடன் இணைப்பதும் இல்லை. இம்மூன்றும், அதாவது மக்கள் வாழ்வும், தமிழின் இலக்கியச் சுவை அல்லது கவிதையும் அறிவியற் பகுதியும் இணைந்தால்தான் இசைத் தொழில் நிலையில் நில்லாது உயரும்.அங்ஙனம் உயரும் காலத்து எழும் இசையே உண்மைத் தமிழிசையாம். அதற்கான முயற்சிதான் தமிழிசை இயக்கம் என்று உணர்தல் வேண்டும். தமிழிசை இயக்கம் அதற்கொரு கருவியேயன்றி ஒரு முடிவாகாது. ஆகவே, அவ்விசைக்கான நெறியிற் செல்லாமல் ஏதோ புரியாத் தெலுங்கை விட்டுப் புரியாத் தமிழில்-பிறமொழி கலந்த உணர்ச்சியற்ற தமிழில் இசைபாடித் தமிழிசை என்பதெல்லாம், தமிழிசை இயக்கத்தின்பாற் படாது; தமிழிசை மயக்கத்தின் பாற்றான் படும் என்க. கற்றார் ஆதரவும், கலையைத் தொழிலாகக் கொண்டவர் ஆதரவும் இல்லாமல் கலையொழியுமென்பதில் ஐயமில்லை. அங்ஙனம், தமிழ்நாட்டில் ஒழிந்த பழைய தமிழ் நாடகக்கலை இன்று பழந்தமிழ்நாட்டின் பகுதியான மலையாள நாட்டில்
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/328
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை