பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் ஓட்டந் துள்ளல் என்ற பெயருடன் நிலை பெறுகிறது. அதனைப் பார்ப்போர் அதனைப் பழந்தமிழ் நாடக நூல்களில் எஞ்சியுள்ள சிலப்பதி காரத்துடன் தொடர்புபடுத்துவரா? படுத்தார். ஆனால், உய்த்தாராய்வார்க்கு இவ் இரண்டினுடைய தொடர்பும் புலப்படல் எளிது. தமிழ்நாட்டில் தற்காலக் கொட்டகை நாடகங்களைப் பார்த்தவர், சிலப்பதிகாரத்தைப் பார்த்தால் அது நாடகக் காப்பியமாகவே தோற்றாது.நாடகத்தில் அங்கம், களம் ஆகிய பிரிவு உண்டு. திரைக்காட்சிக்கான தூண்டுதல்கள் உண்டு. கதையின் பாத்திரங்கள் காட்சிகளில் பரந்து உரையாடுவதன் மூலமே கதை நடைபெறும். சிலப்பதி காரத்தில் இஃது ஒன்றையேனும் தொடர்பாகக் காண முடியாது. ஆகவே, அதை நாடகநூல் என்பது வெறும் பாராட்டோடு அன்றி, நாடகம் என்பது இங்கே நாட்டியம் என்றுகூடப் பொருள்படுமோ என்று எண்ணுவர் சிலர். ஆனால், சிலப்பதிகாரம் நாடகம் என்னும்போது நாட்டியத்தையே நாடகம் எனக் குறிக்கிறோம் என்று என் எண்ணுவது தவறு. ஏனெனில், நாடகம் ஒரு கலையாக மட்டும் எண்ணப்படாமல் தமிழிலக்கியத்தில் மூன்று பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. அது வெறும் கலையானால், நாட்டியமானால், அதில் தமிழின் தொடர்புயாது? அதுதான் எல்லா மொழிக்கும் பொதுவான உடல் சார்புடைய கலையாயிற்றே! அன்றி நாட்டியத்துக்கான தமிழ்ப்பாட்டே நாடகத்தமிழ் என்னின், அதுதான் இசையிலடங்கிற்றே; தனிப்பட நாடகத்தமிழ் என்று கூறப்பட வேண்டுவதில்லையே என்றும் மறுக்க. பின், சிலப்பதிகாரம் எங்ஙனம் நாடகமாம் எனிற் கூறுதும். இன்றைய நாடகங்களுக்குத் திரைகள் உண்டு. அவை காட்சிக்குக் காட்சி மாற்றப்படுகின்றன. பழைய காலத்து நாடகங்களுக்குத் திரை அழகுக்காக இடப் பட்டதுண்டு. காட்சிக்குக் காட்சி மாறுவதில்லை. மேடை மீது நடிகர் வருவதும், போவதுமே காட்சி மாற்றத்தைத் குறிக்கும். இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் காலத்தில் திரை மாற்றம் இல்லை என்றே தோன்றுகிறது. கிரேக்கர் இலக்கியக் காலத்திலும் மேடை நாற்புறமும் திறந்ததொன்றாய் இருந்ததென்று தெரிகிறது. இன்றும் ஓட்டந் துள்ளல் நாற்புறமும் திறந்த மேடையில்தான் நடைபெறுகிறது.