பாட்டு அல்லது இசைப்பாவாகவும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வந்தது. இத்தகைய முதற்கால நாடக அமைப்பை உடையதே, முத்தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம். இதனைப் பின்பற்ற முயன்றேதான் வடமொழியில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்காவியங்களான சம்பூக்களும், நாடகமும் எழுதப்பெற்றன. இன்றைய மலையாளத்து ஓட்டந்துள்ளலும் இதில் சற்றுச் சிதைவுற்ற இன்னொரு வடிவேயாகும். அஃது ன்னும் மலையாளத்தில் ஆங்கிலம் படித்தவரால்கூட முற்றிலும் புறக்கணிக்கப்படாது இலக்கியமாகவே நடத்தப் படினும், செயலுலகில் இழிவாகக் கருதப்படலாயிற்று, அவ்விலக் கியத்தைக் கற்றவர்க்கு உதவியாகச் சிலப்பதிகாரம் இன்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், மொழி பெயர்க்கப் படாமல் அப்படியே மலையாள எழுத்தில் எழுதப்பட்டு மலையாளப் புலவர் வகுப்பு (வித்துவான்)க்கும் தலைப்புலமை (M.A.) வகுப்புக்கும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டும் உள்ள தென்பது கவனிக்கத்தக்கது. மலையாளத்தார் இங்ஙனம் மலையாள இலக்கியத்தின் மேம்பாட்டை உன்னிச் சிலப்பதி காரத்தை ஏற்றனரன்றோ?
அதுபோலத் தமிழ்நாட்டுச் செல்வரும் இவ் ஓட்டந் துள்ளலில் தேர்ச்சி பெற்ற மலையாளிக்குத் தமிழ் கற்பித்தோ, அல்லது தமிழ்ப் புலமையோடு ஓட்டந்துள்ளலும் தமிழ்ச் சிறுவர் சிலர்க்கு ஒருங்கே பயிற்றுவித்தோ, சிலப்பதிகாரத்தை நாடகமாகச் செயற்படுத்தி நடித்துக் காட்டி, அதன் கலைப்பண்பை, அதாவது நாடகப்பண்பைத் தமிழ்நாட்டார் அனுபவிக்கும்படி செய்யலாம். அப்போதுதான் அஃது இன்றுபோல் வெறும் இயற்காவியமாய் வாசிக்கப் படாமல், இசைக்காவியமாய்ப் பாடப்பட்டும், நாடகக் காவியமாய் நடிக்கப்பட்டும், உண்மையாகவே முத்தமிழ்க் காவியமாக விளங்கும். இங்ஙனம் செய்வதால் சிலப்பதிகார ஆராய்ச்சியில் இன்னும் பல அரிய செய்திகள் பொருள் பட விளங்கும். எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரத்தில் காணும் எல்லையற்ற அகண்ட விரிவுரைகள் வாசிப்பவர்க்குச் சலிப்புத் தருவதாயினும், அபிநயத்துடன் நடிக்கப்படின் இதற்காகவே எழுதப்பட்ட தென்பது தெற்றென விளங்கும்.