4) ||--- அப்பாத்துரையம்-1
சில காலமாகத் தமிழன், அது மொழியின் இயற்கையே,
அதில் "தன் செயலாவது யாதொன்றுமில்லை" என்று இருந்து
விட்டான். அதன் பயனாகக் கேடிலாத் தமிழுக்குக் கேடும்
புறக்கணிப்பும் அவமதிப்பும் ஏற்படலாயின. இப்போது அவன்,
தான் முன்பு கொண்ட எண்ணம் தவறென்று கண்டுகொண்டான்.
அதாவது 'தமிழ், தமிழனின்றித் தானே இயங்கவல்லது; தமிழின்
சிறப்புக்கும், தமிழன் சிறப்புக்கும் தொடர்பில்லை' என்ற
இறுமாப்பு முற்றிலும் சரியான கொள்கையன்று என்று அவன்
அறிந்து கொண்டான்.
இயற்கையின் அழகு முயற்சியற்றதாயிருக்கலாம்; ஆனால் இயற்கையை அப்படியே படம் பிடிப்பதுபோல் வரையும் கலைஞன் படைப்பு முயற்சியற்றதா? சிலையின் நிலை அசை வற்றதாய் இருக்கலாம்; ஆனால் நடனமானது ஓரிமைப் பொழுதில் மேற்கொள்ளும் துவண்ட நிலை, நெளிந்த தோற்றம் முயற்சியற்ற ஒன்றா? நிறுத்திவைத்து அசையாதிருக்கும் பம்பரத்தின் நிலையும், சுழற்சியினிடையே அசையாதியங்கும் பம்பரத்தின் நிலையும் ஒன்றா? இவற்றை ஒன்றென்று கொள்பவர்தான் மொழியின் இயல்பு முற்றிலும் இயற்கை என்று கொள்ளுதல் கூடும்!
மொழி, மனிதர் உள்ளத்தின் நினைவுகளின் பயனாய், அவற்றின் ஓயாத சுழற்சியின் பயனாய் ஏற்படுவது. அதன் அமைதி சிலையின் அமைதி அன்று; கலையின் அமைதி. அதன் ஆழம் பொய்கையின் ஆழமன்று; அகன்ற காவிரி நீரின் ஆழம். அதன் தெளிவு பாலை நீரின் தெளிவன்று; கொந்தளிக்கும் கடலின் தெளிவேயாகும். நொடிக்கு நொடி மாறும் இயல்புடைய மனிதர் கருத்துக்களிலிருந்தும் வாழ்க்கைப் போக்கிலிருந்தும் எல்லையற்ற கலைத்திறனால் படம் பிடித்தெடுக்கப்பட்ட ஓர் அமைதியே தமிழன் தனிப்பண்பிற்குக் காரணம்.
தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை இதுகாறும் அழியாதிருந்ததும், அழியாத் தன்மையுடையதா யிருந்ததும் எதனால்? அதனை அறிந்தால் தமிழ்மொழி மேலும் வளமடைய வகை தேடலாம். அதனை அறிவதன் மூலமே நாம் இவ்வழியாத் தமிழன்னையின் பிள்ளைகளாவோம்; அழியாத்