2. பண்டைத் தமிழர் அறிவு நிலை
மக்கள் அனைவரும் வாழ்கின்றனர். ஆனால் வாழ்க்கை யைப் பற்றிப் பெரும்பாலோர் எண்ணிப் பார்ப்பதில்லை! அறியாத வற்றை அறிந்தோம் என்று எண்ணுவது மனிதரியல்பு. நமக்குப் பசி உண்டாகிறது. உணவு உண்கிறோம், பசியேன்? அதை உணவு எப்படிப் போக்கிற்று? அவ்வுணர்வு பின் என்னவாகிறது? அதில் எவ்வளவு, எவ்வாறு உடலில் சேர்ந்து உடலோம்புகிறது என்று நாம் எண்ணிப் பார்ப்பதுண்டா?
நாகரிகம் மிக்கவர் எனத் தருக்கும் மக்களிடையே கூடப் பெரும்பான்மையோர் தாம் எவ்வளவு தொலைவு அந் நாகரிகத்துக் குரியவர் என்று எண்ணுப்பாராது இறுமாப்புக் கொள்கின்றனர். அந்நாகரிகத்துடன் தமக்கு எவ்வளவு தொடர்பு என்று யாரும் கருதிப் பார்ப்பதில்லை. நேரம் பார்க்க நாழிகை வட்டிலை நோக்குகிறோம். அது எப்படி அமைந்ததென்பதை நாம் அறிவதில்லை; அறிய எண்ணுவதுகூட இல்லை! பணிமனைக்கு விரைந்துசெல்ல வேண்டும் போது பொறி வண்டி ஏறிச் செல்கிறோம். அது எவ்வாறு இயங்குகிறது, எவ்வாறு அதை இயங்குவது, அது எவ்வாறு இயற்றப்பட்டது என்பதை அறிவது எத்தனைபேர்? அறிவோம், அறியோம் என்ற கவலையோ, எண்ணமோ உடையவர்கூட மிகக் குறைவே.
மொழி வகையிலும் நாட்டு வகையிலும் பெரும்பாலோர் வாழ்வு இத்தகைய கவலையற்ற வாழ்வே. ஆனால் தமிழ் முன்னோர் மொழியைப் பற்றி, பண்பாட்டைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டு கவலையுடன் அதை வளர்த்தனர். அதை வளர்ப்பதற்கான கருவிகளைத் தேடிக் கையாண்டனர். அதன் பயனாகவே தமிழ் பிற மொழிகளைவிட இளமையுடையதாய், நீண்ட வாழ்நாளுடைய தாய், கன்னித் தாயாய் வளர்ந்தது.