வருங்காலத் தமிழகம்
7
அத்தகைய முயற்சியும் கவலையும் கொள்ளாவிட்டால், அவர்கள் கன்னித்தமிழ் அவர்களுடன் நின்றுவிடும். நம் தமிழ் வேறு தமிழாகவே மாறி, நம் வீழ்ச்சிக்கு வழி ஏற்பட்டுவிடும்.
வாழ்க்கை முறையில் சில மக்கள் நாகரிகமுடையவர் என்று கருதப்படுகின்றனர். சிலர் நாகரிகமற்றவர் என்று புறக்கணிக்கப் படுகின்றனர். ஆனால் நாகரிகமுடையவர் என்று ஒரு வகுப்பைக் கூறுவது எதனால் என்று எண்ணி அறுதியிடல் அரிது. உயர்ந்த வாழ்க்கைத் தரம் நாகரிகமா? ஆம். ஒருவகையில் அது நாகரி கத்தின் அறிகுறியே. ஆனால் அதுவே நாகரிகம் ஆகுமா? புதிய பட்டாடை அணிந்து பட்டணத்தில் திரிபவை நாம் பட்டிக் காட்டான் என்போமே ஒழிய நாகரிகமுடையவன் என்று கூற மாட்டோம். பணம் கிடைத்தபோதெல்லாம் உயரிய உண்டியை உண்பவனை ஊதாரி என்போம். நாகரிகமுடையவன் என்று கூற மாட்டோம். நாகரிகம் என்பது இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பண்பாடு என்றே பல அறிஞரும் கூறுகின்றனர். ஆனால் அதன் மெய்ம்மையை ஆராய்ந்தால் அது வேறெதுவும் அன்று, அறிவுத் திறமும் அதனை செயற்படுத்தும் நயமும் மட்டுமே என்று காணலாம். இவை இல்லாதவிடத்து பொருள், பகட்டு, ஆரவாரம் எதுவும் பயனில்லை; “கற்கக் கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவர் வாக்கு நோக்குக.
எனவே நாகரிகத்திற்கு அறிவும் கலையும் இரு கண்கள் போன்றவை. நாகரிகத்துக்குக் காரணமாயிருப்பது அறிவு. அதன் பயன் கலை, கலையோடு கூடிய வாழ்வு. இவ்விரண்டும் பொருந்திய வாழ்வு அமையுமானால், அதில் காணும் மறைந்த உட்பொருளே அழியாத்தன்மை, உயிர்ப்பு, கன்னித்தன்மை என்பது கலை, இன்பத்தையும் வளர்ச்சியையும், அறிவு, அழியாமையையும் தரும். இவ்விரண்டும் தமிழில், தமிழன் வாழ்வில், மொழியில் நிரம்பி யிருந்ததன் பயனாகவே தமிழ் வ்வளவு நாள் அழியாத, அழிக்க முடியாத, மயங்காத ஒளியாய் நின்று தழைத்தது.
அறிவும் கலையும் வேண்டாம் என்று யாரும் சொல்வ தில்லை. எல்லோரும் எல்லா நாட்டிலும் இதனைப் பறைசாற்றியே வருகின்றனர். அப்படியாயிருக்கத் தமிழன் மட்டும் அவற்றை அழியாத் தன்மையுடன் எப்படிக் கையாண்டான்?