பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

13

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தமிழனிடம் இருந்தன என்பதைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்களில் காணலாம். திருமால் நெறி, சிவநெறி, அகியவற்றின் மயிரிழை நுணுக்கங்கள், இடக்கையால் எறியும் எளிமையுடன், ஆனால் வழுவற, அவற்றில் கூறப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் பல சமயத் தெய்வங்கள் அவ்வச் சமயத்தார் நிலையிலேயே புனைந்துரைக்கப் பெறுகின்றன. ஆயினும் தெளிந்த சமய வாத நூல்களான மணி மேகலை, குண்டலகேசி முதலியவற்றிலன்றி மற்றவற்றில் ஆசிரியர் சமயத்தை அறியக்கூட அவை உதவ வில்லை! அவர்கள் கோட்பாட்டைக் கோட்பாடாகவும், அறிவை அறிவாகவும் கொண்டனர். எல்லாம் படர்க்கையில் வைத்து அறியப்பட்டனவே அன்றி ஒன்றும் தன்மையில் வைத்து உரைக்கப்படவில்லை. இத்தகைய படர்க்கைப் பாட்டு அறிவின் பயனாகவே (Objective Thinking) பொதுமறை தோற்றும் நிலை தமிழ்நாட்டில் மட்டும் சிறப்பாக நிகழ்ந்தது. தெய்வப் புலவர் என திருவள்ளுவரைப் போற்றும் பரிமேலழகர் போன்ற பெரியார் தெய்வ மொழியில் அதற்கு மூலந் தேடுவதுடன் நிற்க வேண்டிய தாயிற்றேயன்றி, தெய்வமொழியில் அதற் கொப்பான நூல் காட்டவோ அல்லது பார்த்துப் பகர்த்துக் கொள்ளவோகூட முடியாது போயிற்று!

வாழ்க்கை முறை, கலை, அறிவியல் ஆகியவற்றிலும் இதே உயரிய அறிவு நயத்தைப் பழந் தமிழ் நூல்களில் காணலாம். கண்ணகியைக் கற்புக் ‘கடவு'ளாக்கிய கதை கூறும் நூல் சிலப்பதி காரம். கண்ணகியை அரசன் கற்புக் கடவுளெனக் கொண்டான் என்று கூறுவதுடன் அது நிற்கிறது. கண்ணகி பிறக்கும் போதே அவள் கற்புக் கடவுளின் திருவிறக்கம் (அவதாரம்) என்று கூறப்பட வில்லை. அவள், பின்னால் கற்புக் கடவுள் ஆவாள் என்பதும் கூறப்படவில்லை. அவள் கடவுளானது, அவள் வாழ்க்கைச் சிறப்பால், மக்கள் மனதில் தோற்றிய வீர உயர்வின் பயனாகவே என்பதை நாம் அறிகிறோம். கண்ணகி வாழ்வை இன்று ஒரு மாது வாழ்வதானால் நாமும் இளங்கோவுடன் சேர்ந்து அவளைக் கடவுள் என்று கூறத் தயங்க மாட்டோம். இது கவிஞன் நாடக ஆசிரியன் செயலன்றி வேறன்று. ஆனால் நாடக ஆசிரியன், மனிதப் பிறவி, கடவுட் பிறவியாக உயர்ந்ததெனக் காட்டினனே யன்றி, அது கடவுள் என்று சொற்பொழிவாற்றவில்லை;

று